தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் போன்றவற்றை தடுப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவுப்படி
அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி இன்று திருச்செந்தூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காயல்பட்டினம் பப்பரப்பள்ளி சுடுகாடு அருகே சந்தேகத்திற்கிடமான
முறையில் நின்றுகொண்டிருந்த காயல்பட்டினம் உச்சி மாகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அப்துல் ரசாக் மகன் சதாம் உசேன் (எ) சிலிண்டர் சதாம் உசேன் (30) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
உடனடியாக மேற்படி போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ 550 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது குறித்து ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு இதுவரை கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 361 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 340 கிலோ கஞ்சா மற்றும் 17 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 17 பேர் உட்பட 174 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் குறித்து தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது போன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.