நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் 6 ஆயிரம் பனியன் கம்பெனிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன, இதனால் சுமார் 100 கோடி அளவிலான பனியன் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த போராட்டத்திற்க்கு116 அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இன்று காலை 9 மணி முதல் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி உள்ளனர்.
திருப்பூர் பனியன் பின்னலாடை ஏற்றுமதியின் மூலம் ஆண்டுக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் நகரமாகவும், உள்நாட்டு உற்பத்தியில் என 22 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் என ஆண்டுக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகத்தை மேற்கொண்டு இந்தியாவின் பின்னலாடை தலைநகராக விளங்கி வருகிறது.
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்தனை சிறப்பு வாய்ந்த வர்த்தக நகர் தற்போது மூலப்பொருளான நூல் விலை உயர்வு காரணமாக கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் முதல் நூல் விலையானது 130 ரூபாய் வரையிலும் உயர்ந்துள்ளது. கிலோ 220 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நூல் விலை தற்போது 350 ரூபாயை கடந்து விற்பனையாகி வருகிறது. மேலும் முழுபணமும் செலுத்திய பின் முன்பதிவின் மூலம் காத்திருப்பின் அடிப்படையிலேயே நூல் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தொடர் விலை உயர்வால் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு பின்னலாடை மற்றும் ஜவுளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏற்றுமதியாளர்கள் பெரும் நஷ்டத்தையும் சந்தித்துள்ளனர்.
பருத்தி பஞ்சு, நூல் உள்ளிட்ட மூலப்பொருட்களை நேரடியாக ஏற்றுமதி செய்வது மற்றும் பதுக்கல் காரணமாக செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தபபடுவதாகவும், அதன் காரணமாக நூல் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இது போன்ற செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தி நூல் விலையை உயர்த்துவதை கண்டித்தும் மூலப்பொருட்களான பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும், தமிழக அரசு பருத்தி பஞ்சினை நேரடியாக கொள்முதல் செய்து பதுக்கலை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் திருப்பூரை சேர்ந்த 116 அமைப்புக்கள் சேர்ந்து இன்று திருப்பூரில் முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர். அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வர்த்தக அமைப்புகளும் இணைந்து போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
அதனடிப்படையில் இன்று காலை முதல் திருப்பூரில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பனியன் உற்பத்தி நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.
பனியன் தொழிலில் சார்பு நிறுவனங்களான சாயப்பட்டறைகள், பிரிண்டிங், ஜாப் ஒர்க் நிறுவனங்கள், எம்பிராய்டரி, கம்பாக்டிங் நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பனியன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் உள்பட 116 அமைப்புகள் ஆதரவளித்து இருந்தன. இதனால் பெரும்பாலான கடைகள் திருப்பூரில் அடைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் சுமார் 25 சதவீத அளவிலான கடைகள் திறக்கப்பட்டு இருக்கிறது.
திருப்பூரில் உள்ள பஸ்கள் வழக்கம் போல் ஓடின. சினிமா தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பனியன் உற்பத்தியாளர்கள் மற்றும் சார்பு அமைப்பினர் இணைந்து திருப்பூர் மாநகராட்சி அருகில் காலை 9 மணி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நூல் விலை உயர்வு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பது அவர்களது முக்கிய கோரிக்கையாக உள்ளது.