சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் லிங்கப்பள்ளி என்ற கிராமத்தில் துணைராணுவப்படையின் முகாம் உள்ளது. இந்த முகாமில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் உள்பட பல்வேறு படைப்பிரிவினர் தங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அந்த முகாமில் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 50-வது பிரிவை சேர்ந்த ரித்தீஷ் ரஞ்சன் என்ற வீரர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தான் வைத்திருந்த ஏகே 47 ரக துப்பாக்கியை கொண்டு சக வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
முகாமில் தூங்கிக்கொண்டிருந்த சக வீரர்கள் மீதும் ரஞ்சன் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மற்ற வீரர்கள் ரஞ்சனை மடக்கி பிடித்தனர்.
ஆனால், ரஞ்சன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சிஆர்பிஎஃப் பிரிவை சேர்ந்த சக வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 13 வீரரகள் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படுகாயமடைந்தவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், துப்பாக்கிச்சூடு நடத்திய சிஆர்பிஎஃப் வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் சிஆர்பிஎஃப் படைப்பிரிவின் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.