வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று முன்தினம் பிற்பகல் முதல் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. இதுபோன்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் நீர்பிடிப்பு பகுதியிலும் கன மழை நீடித்ததால் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நேற்று காலை 22 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது
இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது இதனிடையே நேற்று மழை சற்று ஓய்ந்த நிலையில் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் 6800 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது இருந்தபோதும் பாபநாசம் அணையிலிருந்து வெளியேறும் 6 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர், மற்றும் கடனா அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் காற்றாட்டு வெள்ளம் என தாமிரபரணி ஆற்றில் இன்று 10 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்கிறது
இதனால் இரண்டாவது நாளாகவும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது வெள்ள நீர் ஆற்றில் உள்ள கல் மண்டபங்கள், நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை முருகன் கோவில் உள்ளிட்ட பகுதிகளை சூழ்ந்து செல்கிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, கரை பகுதிக்குச் சென்று பார்வையிடவும் செல்பி எடுக்கவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பாதுகாப்பு காரணம் கருதி நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் தாமிரபரணி ஆற்றங்கரை பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் கரைப் பகுதிக்கு வந்த மக்களை வீடுகளுக்குச் செல்லுமாறு எச்சரித்து அனுப்பினார்.
இன்று காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசம் பகுதியில் 55 மில்லி மீட்டரும், சேர்வலாறு பகுதியில் 22 மில்லி மீட்டரும் மணிமுத்தாறு பகுதியில் 29 மில்லி மீட்டரும், கொடுமுடியாறு அணை பகுதியில் 35 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இன்றும் கனமழை எச்சரிக்கை நீடிப்பதால் நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.