தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு - கொலையாளி 2 பேர் கைது

 


தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்சினி காலனியை சேர்ந்த கண்ணன் மகன் சாரதி (எ) பார்த்தசாரதி (35) என்பவரை அவரது வீட்டின் அருகில் நேற்று (23.11.2021) மர்ம நபர்கள் அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த தென்பாகம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாரதி (எ) பார்த்தசாரதி என்பவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து எதற்காக கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு சம்மந்தப்பட்ட எதிரிகளை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார்.

விசாரணை மேற்கொண்டதில் இறந்த சாரதி (எ) பார்த்த சாரதி என்பவருக்கும் செல்சினி காலனியைச் சேர்ந்த மூக்காண்டி மகன் மாரிமுத்து (26) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 

இந்த முன்விரோதம் காரணமாக நேற்று மாரிமுத்து மற்றும் மாரிமுத்துவின் உறவினரான தூத்துக்குடி வள்ளிநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த ஆதிலிங்கம் மகன் கார்த்திக் (20) ஆகிய இருவரும் சேர்ந்து சாரதி (எ) பார்த்த சாரதியை அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. 

இதனையடுத்து எதிரிகள் மாரிமுத்து (26) மற்றும் கார்த்திக் (20) ஆகிய இருவரையும் மேற்படி தனிப்படையினர் இன்று கைது செய்தனர். மேலும் தென்பாகம் காவல் நிலைய போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட  காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் பாராட்டினார்.

Previous Post Next Post