வடகிழக்குப் பருவமழை எதிரொலியால் கத்தரி, தக்காளி போன்ற அத்தியாவசிய காய்கறிகளின் விலை விண்ணை முட்டி நிற்கிறது. இதில், பெட்ரோல் விலையைத் தாண்டி சென்றது தக்காளியின் விலை.
தக்காளியை 'ஏழைகளின் ஆப்பிள்' எனவும் சொல்வார்கள். ஆனால், தற்போது தக்காளி பணம் படைத்தவர்கள் மட்டுமே வாங்கும் ஒன்றாகி விட்டது.
தக்காளி விலை உயர்வை காரணம் காட்டி புதுமணத் தம்பதிகளுக்கு ஒரு கிலோ தக்காளியை வாங்கிக் கொடுத்து நகைச்சுவை விழிப்புணர்வையும் சிலர் ஏற்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாநகரில் 3-ம் கேட் பாலம் அருகில் இயங்கி வரும் "வி.ஐ.பி பிரியாணி மற்றும் பேமிலி ரெஸ்டாரண்ட்"-டில் நாளை (24.11.21) முதல் வரும் டிசம்பர் 25-ம் தேதி வரை 2 பிரியாணி வாங்கினால் ஒரு கிலோ தக்களி இலவசம் என்ற தக்காளி ஆஃபரை அறிவித்துள்ளது.
"எங்க பிரியாணியின் சுவையை பரப்புவதுடன் தற்போதைய தக்காளி தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில்தான் தக்காளி ஆஃபரை அறிவித்துள்ளோம்" என்கிறார் ரெஸ்டாரண்டின் உரிமையாளர் கண்ணா பாண்டியன்.
" ரெண்டு பிரியாணி வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசமாத் தர்றாங்களாம்" என்ற வி.ஐ.பி ரெஸ்டாரண்டின் அறிவிப்பு வாட்ஸ் அப் கார்டு தூத்துக்குடி சமூக வலைதளக் குழுக்களில் வட்டமடிக்கிறது.