12 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. அத்துடன் நீர் நிலைகள் நிரம்பி வருவதால் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றங்கரையோரம் , தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது
இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று தெற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது . இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று , மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் என்பதால் தமிழகத்திற்கு நாளையும், நாளை மறுநாளும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு காரணமாக அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் அவ்வப்போது கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, வங்கக் கடல், அரபிக்கடல் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.