நெல்லை மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவும் விடிய விடிய விட்டு விட்டு கனமழை பெய்த நிலையில் நெல்லை டவுண் அடுத்த கோடீஸ்வரன் நகர்ப்பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று வேருடன் ரோட்டில் சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவானது.
தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடம் வருகை தந்த வருவாய்த்துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் வேருடன் சாய்ந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பிரதான சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் டவுன் பேட்டை தற்காலிகமாக போக்குவரத்து தடைபட்டது.
மேலும் பேட்டை வழியாக செல்லக்கூடிய சுத்தமல்லி சேரன்மகாதேவி கடையம் முக்கூடல் போன்ற பகுதிகளுக்கும் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டு குன்னத்தூர் மலையாள மேடு வழியாக பேட்டை பகுதிக்கு செல்வதற்கு காவல்துறை மூலம் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டது
10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் அதி நவீன அரவை இயந்திரங்கள் மூலம் மரத்தை அகற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். பேட்டை காவல் ஆய்வாளர் ஹரிஹரன் நேரடியாக களம் இறங்கி மரத்தை அகற்றும் பணியை துரிதப்படுத்தினார். பேட்டை வழியாக கனரக வாகனங்கள் செல்ல முடியாத சூழல் இருப்பதால் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்பு சாலையில் கிடந்த ஆலமரம் அகற்றப்பட்டது மீண்டும் அந்த வழியாக போக்குவரத்து தொடங்கப்பட்டது.