குஜராத்தில், குட்கா விநியோகஸ்தர் ஒருவருக்கு சொந்தமான இடங்களில் நடத்திய வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.100 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த விநியோகஸ்தர் பெயர் வெளியிடப்படவில்லை.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குஜராத் மாநிலம், ஆமதாபாத்தை சேர்ந்த குட்கா விநியோகஸ்தருக்கு சொந்தமான நிறுவனம் , அலுவலகம் உள்ளிட்ட 15 இடங்களில் கடந்த நவ.16ல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, ரூ.7.5 கோடி ரொக்கம், ரூ.4 கோடி மதிப்பு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கணக்கில் வராத ரூ.30 கோடி வருமானத்தை மறைத்ததை அந்த நிறுவனம் ஒப்பு கொண்டது.
சோதனையின் போது சிக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் அந்த வருமானத்தை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்த நிறுவனம் ஒப்பு கொண்ட ரூ.30 கோடி உட்பட கணக்கில் வராத ரூ.100 கோடிக்கும் அதிகமான வருமானமும் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.