அதிமுக ஆட்சியில் மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி ஊழல்!: லஞ்ச ஒழுப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட கோரி ஐகோர்ட்டில் வழக்கு..!!


சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை மத்திய சிறையில் சுமார் ரூ.100 கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. வழக்கறிஞரும், சிறைக்கைதிகள் உரிமை மைய இயக்குனருமான பி.புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். மனுவில், மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதிகளால் எழுதுகோல்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்களுக்கு அனுப்பப்பட்டதாக போலி கணக்கு தயாரித்து ஊழல் செய்துள்ளதாக குற்றம்சாட்டியிருக்கிறார். 

இதில் கடந்த 2016 முதல் மார்ச் 2021 வரை கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் அளவிற்கு போலி கணக்கு மூலம் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், இதற்கான ஆதாரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தாங்கள் திரட்டியுள்ளதாகவும், அவை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டியிருக்கிறார். உரிமை சட்டத்தில், சிறை கைதிகள் மூலம் ஏராளமான எழுதுகோல்கள் தயாரிக்கப்பட்டதாகவும், கைதிகளுக்கு சம்பளம் கொடுத்ததாகவும் போலி கணக்கு தொடரப்பட்டிருப்பது உறுதியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

சிறையில் நடந்துள்ள ஊழலுக்கு அப்போதைய சிறைத்துறை கண்காணிப்பாளர், சரக டி.ஐ.ஜி.களும் உடந்தை என்றும் இது தொடர்பாக ஏற்கனவே தமிழகத்தின் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், சிறைத்துறை டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு புகார் அளித்துள்ளதாகவும் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். எனவே இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார். 

இந்த தகவல் அங்குள்ள கைதிகள் மூலமாக தனக்கு தெரியவந்ததாகவும், தொடர்ந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இதுகுறித்து விசாரித்து உரிய ஆதாரங்களை திரட்டி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக புகழேந்தி சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த வழக்கானது விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post Next Post