கொரோனா காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் கந்தசஷ்டி விழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி.!


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். 

மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார். கூட்டத்தில் கந்தசஷ்டி விழா தொடர்பாக அனைத்து துறை சார்பில் செய்யப்படவேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 


இதனை தொடர்ந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இதில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் நிகழ்ச்சிகளில் கொரோனா விதிமுறை அமல் காரணமாக பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் சமூக வலைதளம் மற்றும் தொலைக்காட்சிகள் மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர திருவிழாவின் மற்ற நாட்களில் தினமும் 10 ஆயிரம் பேர் கூட்ட நெரிசல் இன்றி சாமி தரிசனம் செய்ய முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். மேலும் திருச்செந்தூர் கோவில் வளாகத்தை சுற்றி உள்ள தனியார் தங்கும் விடுதிகள், சுற்றுப் பிரகார மண்டபங்களில், கோவில் வளாகம் ஆகியவற்றில் பேக்கேஜ் முறையில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது. 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் போன்ற நாட்களை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் தமிழக அரசின் உத்தரவுப்படி பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படும். அதேவேளையில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு தனியார் அமைப்பினர் அன்னதானம் வழங்குவதற்கு தடை விதிக்கப்படுகிறது. 

மேலும் திருவிழாவுக்கு சிறப்பு பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது.  மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு குடிநீர் தொட்டிகள் கழிப்பிட வசதிகள் அமைப்பதற்கு அந்தந்த துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

Previous Post Next Post