தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டத்தில் குற்ற செயல்கள் நிகழ்வதற்கு வாய்ப்புள்ளதால், அவற்றை தடுக்கும் பொருட்டு தூத்துக்குடி மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய முக்கிய இடங்களை கண்காணிப்பதற்கு
4 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு புறமும், அதாவது 360 டிகிரியில் கண்காணிக்கக்கூடிய சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ள 2 ரோந்து வாகனங்கள் மூலம் நகரில் மக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களில்
குற்ற செயல்கள் நடவாமல் கண்காணிப்பதோடு மக்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்றவற்றை வலியுறுத்தி தொடர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதில் தென்பாகம் காவல் நிலையம் முன்பாக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரத்தை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அத்துடன் கேமராக்கள் பொருத்திய மேற்படி நான்கு சக்கர வாகன ரோந்தையும் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில்,
பொதுமக்கள் கடைவீதிகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும்போது தங்களது உடமைகளிலும் கவனமாக இருக்க வேண்டும். தீபாவளி பண்டிகை முன்னிட்டு இந்த ஒரு வார காலத்திற்கு தூத்துக்குடி நகரத்தில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் சீர் செய்யப்படும்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தீபாவளியை முன்னிட்டு 2 காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உட்பட 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு முன்னதாகவே தீபாவளி நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஆண்டு இதுவரை 163 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிகழ்வின் போது தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன், தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ்,
தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள், உதவி ஆய்வாளர் சுனைமுருகன் உட்பட பொதுமக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.