"தமிழர்களுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டாம்“- கனிமொழி எம்.பி

"தமிழர்களுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டாம்“



தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் விகாஷ் என்ற இளைஞர் சொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். பின்னர் ஆர்டர் செய்யப்பட்ட உணவு முழுமையாக டெலிவரி செய்யப்படவில்லை.

இதனால் விகாஷ் சொமேட்டோ சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு, பணத்தை திருப்பித் தரும்படி கேட்டுள்ளார். அப்போது, “மொழிப் பிரச்சனையால் சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்திடம் இது குறித்துக் கேட்க முடியவில்லை” என சொமேட்டோ சேவை மையம் கூறியுள்ளது.

இதையடுத்து விகாஷ், “தமிழ்நாட்டில் சொமேட்டோ செயல்பட்டால், அங்கு வாழும் மக்களின் மொழியை அறிந்தவர் வேலைக்கு அமர்த்த வேண்டும்” என கூறியுள்ளார். இதற்கு, “இந்தி நமது தேசிய மொழி,எல்லோரும் குறைந்தபட்சம் இந்தி தெரிந்திருக்க வேண்டும்” என சொமேட்டோ சேவை மையம் விகாஷிடம் கூறியுள்ளது. சொமோட்டோ நிறுவனத்தின் இந்த பதிலையடுத்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், தி.மு.க மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்.பி, தமிழர்களுக்கு யாரும் இந்தியர்கள் என்று பாடம் நடந்த வேண்டிய அவசியமில்லை என சொமோட்டோ நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கனிமொழி எம்.பி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “குறிப்பிட்ட மொழிகளில் மட்டுமே சில நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை செயல்பட்டு வருகிறது. நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மாநில மொழியில் பேசுவதைக் கட்டாயமாக்க வேண்டும்.

வாடிக்கையாளர்களுக்கு இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழர்களுக்கு யாரும் யார் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை” என பதிவிட்டுள்ளார்.*
Previous Post Next Post