வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தீயனைப்புத் துறை வீரர்கள் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் வடகிழக்கு பருவமழை நேரத்தில் ஏற்படும் விபத்துக்கள் அதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்வது, அவசர கால நேரத்தில் ஏற்படக்கூடிய தீ விபத்துகளில் சிக்கி கொண்டவர்களை எவ்வாறு காப்பாற்றுவது போன்றவை செய்து காண்பிக்கப்பட்டது.
இந்த ஒத்திகை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் குமார் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில்
வெள்ளம் சூழக்கூடிய தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு அங்குள்ள மக்களுக்கு ஆபத்து காலத்தில் பாதுகாப்பாக இருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வெள்ள காலங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக மோட்டார் பொருத்திய 5 படகுகள் தயார் நிலையில் உள்ளன. போதுமான அளவு உயிர்காக்கும் கவச உடைகளும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் நிலை தன்னார்வலர்களாக 150 பேர் உள்ளனர். அவர்களுக்கும் உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வதற்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் படை தயாராக உள்ளது என்றார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.