9 மாதத்தில் 150 பேர் குண்டர் சட்டத்தில் கைது - தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார் அறிவிப்பு .!


தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 17.09.2021 அன்று தூத்துக்குடி டிஎம்பி காலனியைச் சேரந்த கருப்பசாமி மகன் சிவபெருமாள் (45) என்பவரை தூத்துக்குடி திம்மையார் காலனியைச் சேர்ந்த மாடசாமி மகன்கள் ஆறுமுகம் (31) மற்றும் சொர்ணராஜ் (28) 

ஆகியோர் சேர்ந்து முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கி கொலை செய்த வழக்கில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ஆறுமுகம் மற்றும் சொர்ணராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். 

மேற்படி இவ்வழக்கின் எதிரிகளான ஆறுமுகம் மற்றும் சொர்ணராஜ் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன்,

கடந்த 08.07.2021 அன்று தூத்துக்குடி தாளமுத்துநகர் சுனாமி காலனியைச் சேர்ந்த எஸ்தோ ஜோ (எ) தர்மராஜ் மகன் நிர்மல்குமார் (38) என்பவர் 10 வயது சிறுமியை பாலியல் வண்புணர்ச்சி செய்த வழக்கில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து நிர்மல்குமாரை கைது செய்தனர். 

மேற்படி இவ்வழக்கின் எதிரியான நிர்மல்குமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா

கடந்த 15.09.2021 அன்று ஸ்ரீவைகுண்டம் அங்கமங்கலம் அன்னாநகரைச் சேர்ந்த சுப்பையா மகன் முத்துக்குமார் (42) என்பவர் 4 ½  வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர். 

மேற்படி இவ்வழக்கின் எதிரியான முத்துக்குமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. லட்சுமிபிரபா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.

மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.செந்தில் ராஜ் தூத்துக்குடி திம்மையார் காலனியைச் சேர்ந்த மாடசாமி மகன்கள் 1) ஆறுமுகம் மற்றும் 2) சொர்ணராஜ், தூத்துக்குடி தாளமுத்துநகர் சுனாமி காலனியைச் சேர்ந்த எஸ்தோ ஜோ (எ) தர்மராஜ் மகன் 3) நிர்மல்குமார் மற்றும் 

ஸ்ரீவைகுண்டம் அங்கமங்கலம் அன்னாநகரைச் சேர்ந்த சுப்பையா மகன் 4) முத்துக்குமார் ஆகிய 4 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் மேற்படி எதிரிகள் 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த ஆண்டு இதுவரை மொத்தம் கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 15 பேர் உட்பட  150 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Previous Post Next Post