தூத்துக்குடியில் பொதுப்பணித்துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக போலி பணி நியமண ஆணை வழங்கி ரூபாய் 68,00,000/- பணத்தை மோசடி செய்த 3 பேர் கைது - கைது செய்த மாவட்ட குற்றப் பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்
தூத்துக்குடியில் சிலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்களிடம் புகார் அளித்தனர். மேற்படி புகார்களின் அடிப்படையில்
தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி மில்லர்புரம், ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்த பிச்சைமணி மகன் சக்திவேல் (37), அவரது மனைவி ஜெயசித்ரா (30), தூத்துக்குடி கிருபை நகரை சேர்ந்த கல்கண்டு மனைவி உஷா (34),
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த மூக்கையா மகன் முத்துபாண்டி மற்றும் ஓட்டப்பிடாரம் சிலோன் காலனி பகுதியை சேர்ந்த முனியசாமி மகன் கார்த்திக்குமார் ஆகிய 5 பேரும்,
ஓட்டப்பிடாரம் சிலோன் காலனி பகுதியை சேர்ந்த சண்முகராஜ் மகன் முத்துகுமார் (29) என்பவரிடம் பொது பணித்துறையில் நல்ல வேலையில் இருப்பதாக கூறி அறிமுகமாகி பொதுபணித்துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி
ஒரு வேலை வாங்கி தருவதற்கு ரூபாய் 3,00,000/- பணம் கொடுத்தால்போதும் என்று கூறியதால் இதனை நம்பி மேற்படி முத்துகுமார் தனக்கும், தனது மனைவி மற்றும் மைத்துனர் ஆகிய 3 பேருக்கும் வேலை வேண்டும் என்று கூறி மேற்படி சக்திவேலிடம் ரூபாய். 6,00,000/- மும்,
முத்துபாண்டியிடம் ரூபாய் 3,00,000/- பணமும் என மொத்தம் ரூபாய். 9,00,000/- பணத்தை வங்கி மூலமாக கொடுத்துள்ளார். இதனையடுத்து எதிரிகள், பணம் கொடுத்த முத்துகுமார் மற்றும் அவரது மைத்துனருக்கு திருச்செந்தூர் பொது பணித்துறை குடோனில் பொறுப்பாளராகவும்,
அவரது மனைவிக்கு தூத்துக்குடி பொது பணிதுறையில் கணக்கராகவும் போலியாக பணி நியமன ஆணை தயார்செய்து அதில் பொதுபணித்துறை அதிகாரிகள் போல மேற்படி 5 எதிரிகளும் போலியாக கையெழுத்திட்டு அரசு வேலைக்கான பணியாணையை வழங்கி சென்றுள்ளனர்.
அதன் பின்னர் அது போலியான பணியாணை என்று தெரிந்ததும் மேற்படி முத்துகுமார், மேற்படி எதிரிகள் 5 பேரிடமும் சென்று பணத்தை திரும்ப கேட்டதற்கு, மேற்படி எதிரி சக்திவேல் கடந்த 10.05.2021 அன்று ஒரு மாதத்தில் முழு பணத்தையும் திருப்பி கொடுத்துவிடுவதாக கூறி முதலில் ரூபாய் 90,000/-த்தை மட்டும் திருப்பி கொடுத்துள்ளார்.
அதன்பிறகு இதுவரை மீதி பணம் எதுவும் தரவில்லை என்றும், மீதி பணத்தை தருமாறு கேட்டதற்கு தர முடியாது என்று மறுத்துள்ளனர்.
இதே போன்று தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் பகுதிகளில் வேறு சிலரிடமும் அரசு வேலை வாங்கி தருவதாக போலி நியமண ஆணை தயாரித்து அதில் போலியான அரசு முத்திரைகளை பயன்படுத்தி கையெழுத்திட்டு மோசடியாக ரூபாய். 68,10,000/- பணத்தினை ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்தது.
மேற்படி எதிரிகளில் சக்திவேல், அவரது மனைவி ஜெயசித்ரா மற்றும் உஷா ஆகிய 3 பேரையும் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் இன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட மற்ற எதிரிகளை மேற்படி தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேற்படி மோசடி நபர்களை கைது செய்த தூத்துக்குடி மாவட்ட குற்றப் பிரிவு போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.