சாக்குப்பையில் பெண்ணின் முகத்தை மூடி தாலிச்செயின் பறித்த 3 பேர் கைது - 5 பவுன் தங்க நகை மீட்பு.!


தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெப்பக்குளத்தெருவைச் சேர்ந்த கோபால் மனைவி அருணாச்சலவடிவு (59) என்பவர் கடந்த 30.09.2021 அன்று தனது மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவதற்காக 

தாமிரபரணி நதிக்கரையோரம் ஸ்ரீகிருஷ்ணன்கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் திடீரென வெள்ளை நிற சாக்கு பையை கொண்டு அவரது முகத்தை மூடி அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச்செயினை பறித்துச் சென்றுவிட்டனர்.

இது குறித்து மேற்படி அருணாச்சலவடிவு கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படையினர் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில் தனிப்படை போலீசார் ஆழ்வார்தோப்பு ரோட்டின் தென்புறம் சுடுகாட்டுக்கு கிழக்கே உள்ள புளியந்தோப்பு அருகே நேற்று  ரோந்து சென்றபோது அங்கே சந்தேகப்படும் படியாக உட்கார்ந்து 

மது அருந்திக்கொண்டிருந்த 3 பேர் தனிப்படை போலீசாரைப் பார்த்ததும் தப்பி ஓடினார்கள், அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டதில் ஸ்ரீவைகுண்டம், அரசாழ்வார் கோவில்தெருவைச் சேர்ந்த சுடலைக்கண்ணு மகன்  மாயாண்டி (31), 

அதே பகுதியான சந்தையடித்தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் இசக்கி ராஜா என்ற ராஜாகிளி (26) மற்றும் செய்துங்கநல்லூர், வி. கோவில்பத்து பகுதியைச் சேர்ந்த ராமையா மகன் அருண்ராஜேஷ் என்ற ராஜேஷ் (30) என்பதும், 

அவர்கள் திட்டம்போட்டு கங்கை முருகன் மகன் மணிகண்டன் என்பவர் மூலம் நகையை பறித்து அதை விற்பனை செய்ததையும் ஒப்புக்கொண்டனர். உடனே போலீசார் மேற்படி 3 பேரையும் கைது செய்து, 

சாத்தான்குளம செல்வேந்திரன் நகை தொழில் செய்யும் பட்டறையில் உருக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் 1 ½ லட்சம் மதிப்புள்ள 5பவுன் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வழக்கில் எதிரிகள் மாயாண்டி, இசக்கி ராஜா என்ற ராஜாகிளி மற்றும் அருண்ராஜேஷ் என்ற ராஜேஷ் ஆகிய  3 பேரையும் கைது செய்து, 5 பவுன் தாலிச்செயினையும் பறிமுதல் செய்த ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய காவல் ஆய்வாளர்  அன்னராஜ் தலைமையிலான தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  பாராட்டினார்.

Previous Post Next Post