தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.195 கோடியில் புதிய பயணிகள் முனையம், கட்டுப்பாட்டு கோபுரம் அமைக்கும் பணியை பூமி பூஜையுடன் தென் மண்டல நிர்வாக இயக்குநர் மாதவன் துவக்கி வைத்தார்
வேகமாக வளர்ச்சியடைந்து வரும் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு தினமும் 3 விமானங்களும், வாரம் தோறும் பெங்களூருக்கு 3 விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் சுமார் 400 முதல் 600 பயணிகள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மாநில அரசு சார்பில் 610.25 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் விமான நிலைய விரிவாக்க பணிகளை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் படிப்படியாக மேற்கொண்டு வருகிறது.
அதன்படி விமான ஓடுதளம் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது 30 மீட்டர் அகலமும், 1349 மீட்டர் நீளமும் கொண்ட விமான ஓடுதளம் உள்ளது. இதனை 45 மீட்டர் அகலமும், 3 ஆயிரத்து 115 மீட்டர் நீளமும் கொண்ட ஓடுதளமாக மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பிறகு ஏ-321 வகையை சேர்ந்த பெரிய விமானங்கள் தூத்துக்குடியில் தரையிறங்க முடியும். விமான நிலையத்தில் இரவு நேரத்தில் விமானங்கள் தரையிறங்க வசதியாக மின்விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் வல்லநாடு மலையில் சிக்னல் விளக்கு அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தென் மண்டல நிர்வாக இயக்குநர் ஆர்.மாதவன் நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் அவர் ஆலோசனை நடத்தினார். தூத்துக்குடி விமான நிலையத்தில் தற்போது ஒரே நேரத்தில் 80 பயணிகள் வந்து செல்லும் வகையிலான பயணிகள் முனையம் தான் உள்ளது.
ஒரே நேரத்தில் 600 பயணிகள் வந்து செல்லும் வகையில் புதிய பயணிகள் முனையம் அமைக்கப்படுகிறது. இந்த பயணிகள் முனையத்தில் பயணிகளுக்கான அனைத்து வசதிகள், முக்கிய பிரமுகர்கள் ஓய்வறை, பண பரிமாற்ற மையம், ஏடிஎம் மையம், கேன்டீன் வசதி, பயணிகள் மற்றும் உடமைகளை பரிசோதிக்கும் வசதி, மருந்து கடை, விமான டிக்கெட் மையங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இடம் பெறும். இதே போன்று விமான நிலையத்தில் புதிதாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் தீயணைப்பு நிலையமும் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் ரூ.195 கோடியே 32 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கான பூமி பூஜை விமான நிலைய வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தென் மண்டல நிர்வாக இயக்குநர் மாதவன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டினார். மேலும், விமான நிலைய தீயணைப்பு நிலையத்தில் முதலுதவி அறையை திறந்து வைத்தார். மேலும் நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த ஓவியங்களை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி இந்திய கடலோர காவல் படை நிலைய கமாண்டர் அரவிந்த் சர்மா, மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இணை பொதுமேலாளர் (சிவில்) ஏ.ராதாகிருஷ்ணன், துணை பொதுமேலாளர் (விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவு) ஆர்.சுப்ரவேலு, மேலாளர் ஜெயராமன், தூத்துக்குடி வஉசி துறைமுக மக்கள் தொடர்பு அலுவலர் சசிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.