தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம் செப்.12ம் தேதி 605 குழுக்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட உள்ளது என்றார். இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் 18 இலட்சம் மக்கள் தொகை உள்ள நிலையில், இதில் 18 வயத்துக்கு மேற்பட்டவர்கள் என்ற கணக்கில் 14 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இதுவரை முதல் டோஸ் 5 இலட்சம் பேர் மட்டும் என 37 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர்.
ஆனால் நம்முடைய இலக்கு 80 சதவீதம் என்ற நிலையில், தூத்துக்குடியில் இன்னும் 12 லட்சம் பேர் தடுப்பூசி போட வேண்டிய நிலை உள்ளது. இரண்டாம் டோஸ் போட்டவர்கள் 1 1/2 லட்சம் மட்டுமே, இதை முன்னிட்டு வரும் ஞாயிறன்று செப்.12ம் தேதி 1 இலட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் வகையில் மெகா முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 605 குழுக்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட உள்ளது.
இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடுவதற்கு 38 ஆயிரம் உள்ளனர், இவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு தடுப்பூசி போடப்படும் என்ற அவர், மேலும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் தடுப்பூசி செலுத்த ஏதுவாக கூடுதலாக 50 மொபைல் குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது என்றார். மாவட்டத்தில் பொதுமான அளவு தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது.
தொடர்ந்து 3 நாட்கள் அதிக திருமணம் மற்றும் பண்டிகை நடைபெறுவதால், திருமண நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள் புகைப்படம் எடுக்க முகக்கவசத்தை அகற்ற வேண்டாம், இதற்காக தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்படும். முகக்கவசம் அணியாமல் திருமண மண்டபத்தில் பங்கேற்பவர்களுக்கு அபராதம், மண்டப உரிமையாளருக்கு 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றார்.