பி.எம்.கேர்ஸ் : அரசுக்கு சொந்தமானது அல்ல என்றால் அதை நிர்வகிக்கும் தனியார் யார் ? : திமுக சுளீர் கேள்வி.!


சென்னை : பி.எம்.கேர்ஸ் நிதியம் அரசுக்கு சொந்தமானது அல்ல என்றால் அதை நிர்வகிக்கும் தனியார் என்று திமுக அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது. முரசொலி நாளேட்டின் தலையங்கம் பி.எம்.கேர்ஸ் நிதியம் குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அதன் நிர்வாகியும் பிரதமர் அலுவலகத்தின் துணை செயலாளருமான பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவா தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. 

பி.எம்.கேர்ஸ் நிதி அறிவிப்பில் ஒன்றிய அரசு முத்திரையும் பிரதமர் மோடி வணங்கி நிற்பது போன்ற படமும் இருந்ததை சுட்டிக் காட்டியுள்ள முரசொலி, தனியார் அறக்கட்டளைக்கு பிரதமர் விளம்பர தூதராக இருக்க முடியாது இருக்கவும் மாட்டார் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளது.  

பி.எம்.கேர்ஸ் நிதியத்தின் தலைவராக பிரதமரும் ஒன்றிய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை உறுப்பினர்களாகவும் இருக்கும் நிலையில், அதன் நிர்வாகப் பொறுப்பை பிரதமர் அலுவலகத்தின் துணை செயலாளர் பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவா கவனிப்பதை தலையங்கம் கோடிட்டு காட்டியுள்ளது. 

ஒன்றிய அரசு அதிகாரியாக இருந்தாலும் பி.எம்.கேர்ஸ் நிதியத்தற்கு மதிப்பூதிய அடிப்படையில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டு இருக்கிறேன் என்று பிரதீப் குமார் தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு இருப்பதை சுட்டிக் காட்டியுள்ள முரசொலி, அவரை பணியாற்ற அனுமதித்தது யார், பிரதமர் அலுவலக அதிகாரி இவ்வாறு எல்லா இடங்களிலும் பணியாற்ற பிரதமர் அனுமதித்து விடுவாரா என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.

பி.எம்.கேர்ஸ் நிதியத்திற்கு நிதி வழங்குமாறு 2020ம் ஆண்டு மார்ச்சில் பிரதமர் மோடியே கேட்டுக் கொண்டதன் பேரில் முதல் 5 நாட்களில் 3, 076 கோடி ரூபாய் நிதி சேர்த்ததை ஒன்றிய அரசு உறுதிப்படுத்தி இருப்பதாக முரசொலி தலையங்கம் கூறுகிறது. இந்த நிதியை கொண்டு வெண்டிலேட்டர்கள் வாங்கப்படும், ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என்று அறிவித்த ஒன்றிய அரசு, தற்போது பி.எம்.கேர்ஸ் நிதியம் ஒன்றிய அரசுக்கு சொந்தமானது அல்ல என்று கூறி இருப்பது குறித்து முரசொலி அதிர்ச்சி தெரிவித்துள்ளது.

அரசுக்கு சொந்தமானது அல்ல, அரசின் உதவியுடன் செயல்படும் தனி அமைப்பும் அல்ல என்றால் அது தனியாருக்கு சொந்தமானது என்பது உறுதியாகி உள்ளது. அப்படி என்றால் அந்த தனியார் யார் ? தனியாரால் ஒன்றிய அரசின் லட்சினையைப் பயன்படுத்த முடியுமா ? பிரதமரே இப்படி ஒரு அறக்கட்டளையை உருவாக்கி தமது பெயரில் பணம் திரட்ட முடியுமா என்று அடுக்கடுக்கான கேள்விகளை முரசொலி எழுப்பியுள்ளது.  

Previous Post Next Post