தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் திமுக நகர செயலாளர் சுரேஷ் கொலை முயற்சி வழக்கில் 4வது குற்றவாளியாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், இன்று (11ம் தேதி) இவ்வழக்கின் இறுதி விசாரணைக்காக சம்பந்தப்பட்ட அனைவரும் ஆஜாராகும்படி தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி நான்காவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முதலாவது குற்றவாளியான அ.தி.மு.கவைச் சேர்ந்த கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மாவட்ட முதன்மை நீதிபதி தங்க மாரியப்பன் முன்னிலையில் ஆஜரானார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து நடந்து முடிந்த தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டவர்தான் இந்த கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன்.
தி.மு.க மற்றும் அ.தி.மு.க என இரண்டு கட்சியினரும் ஓரே வழக்கிற்காக ஆஜராக வந்ததால் நீதிமன்ற வளாகமே பரபரப்பாகக் காணப்பட்டது.