தூத்துக்குடியை அடுத்த அந்தோணியார் புரத்தில் வசித்து வருபவர் பிரகாஷ்பாய் (வயது 65). இவர் அப்பகுதியில் பி.சி.எஸ். பாலி கேப்ஸ் எனும் பெயரில் பிளாஸ்டிக் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
பயன்படுத்தி தூக்கி எறிப்பட்ட தண்ணீர் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள், மரத்தூள் ஆகியவற்றை அரைத்து குஜராத், கொல்கத்தா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை பிளாஸ்டிக் ஏற்றுமதி நிறுவனத்தின் சேமிப்பு அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ சிறிது நேரத்திலேயே மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதைப்பார்த்த நிறுவன ஊழியர்கள் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையே வானில் விண்ணுயர எழுந்த கரும்புகையால் அப்பகுதியே பெரும் பரபரப்புக்குள்ளானது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் பிளாஸ்டிக் நிறுவனத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் தீயை அணைக்க நடைபெற்ற போராட்டத்தில் 2 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஒரு தனியார் லாரி ஈடுபட்டது.
இந்த தீவிபத்தில் ஏற்றுமதி நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கில் மதிப்புள்ள ஏற்றுமதி பொருள்கள் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எவ்விதக் காயமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தீ விபத்து குறித்து தீயணைப்பு படையினர் கூறுகையில், ஏற்றுமதி நிறுவனத்தில் பயன்படுத்தபடாத பகுதியில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர்.