பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணனுக்கும் விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
விழுப்புரம் அருகே அரசுப் பாதுகாப்புப் பணியில் இருந்த தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் மீது காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவா், கடந்த பிப்ரவரி மாதம் புகாா் அளித்தாா். இந்தப் புகாா் தொடா்பாக விசாரிக்க கூடுதல் தலைமைச் செயலா் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 போ் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது.
மேலும், பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரியை புகாா் அளிக்க விடாமல் இடையூறாக இருந்ததாக அப்போதைய செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கண்ணன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, சிறப்பு டி.ஜி.பி., காவல் கண்காணிப்பாளா் ஆகிய இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.
இதனிடையே, இந்த வழக்கை தாமாக எடுத்துக்கொண்ட சென்னை உயா் நீதிமன்றத்தின் கண்காணிப்பில், விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில் இந்த பாலியல் வழக்கை விரைந்து விசாரித்து டிசம்பர் 20ம்தேதிக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும், இது தொடர்பான அறிக்கை டிசம்பர் 23ம்தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து விழுப்புரம் கோர்ட்டில் ஆகஸ்ட் 9ம்தேதி (இன்று) முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்பி கண்ணன் ஆகிய இருவரையும் ஆஜர்படுத்த சிபிசிஐடி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று காலை நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு டிஜிபி,முன்னாள் எஸ்பி கண்ணன் ஆகிய இருவரும் நீதிபதி முன்னிலையில் ஆஜர் ஆனர். அவர்களிடம் நீதிபதி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது. இந்நிலையில் இந்த வழக்கை வரும் 16ம்தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி கோபிநாதன், முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் முன்னாள் எஸ்பி கண்ணன் ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.