மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் புதிய மீன்பிடி சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனவர்கள் அனைவரும் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
மத்திய அரசின் புதிய மீன்பிடி சட்டத்திருத்த மசோதா 2021 -ஐ கண்டித்தும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் புதிய மீன்பிடி சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய கோரியும் இன்று
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை முதல் வேம்பார் வரை உள்ள கடற்கரை கிராமங்களில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் மீன்பிடி சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக என்று கருப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.
மேலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக் கணக்கான மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மீனவர்கள் முற்றுகையால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மீனவர் சங்க பிரதிநிதிகளிடம் எஸ்பி ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து மீனவர் சங்க பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அதில், "மத்திய அரசின் புதிய மீன்பிடி சட்டத்திருத்த மசோதா மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிக்கக் கூடியதாக உள்ளது. இந்த சட்ட திருத்தம் அமலுக்கு வந்தால் மீனவர்கள் தர்மம் எடுக்கும் நிலைக்குதான் தள்ளப்படுவார்கள்.
தூத்துக்குடி மீன்பிடி தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர். மீனவர்கள் சட்டத்திருத்த வரைவுகளை மீறி செயல்பட்டால் முதல்முறை அபராதமும், இரண்டு முறை அபராதத்துடன் கூடிய சிறை தண்டனையும்,
மூன்றாம் முறை மீறினால் படகு பறிமுதல் செய்யப்படுவதுடன் சம்பந்தப்பட்ட மீனவர் மீண்டும் தொழில் செய்ய முடியாதபடிக்கும் கடும் நடவடிக்கைகள் எடுக்க வழிவகுக்கிறது. இது மீனவர்களை முற்றிலும் முடக்கிப் போடும் நடவடிக்கை.
எனவே மத்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் புதிய மீன்பிடி சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்” என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.