கோவில்களில் தங்க நகை மற்றும் வெள்ளி சாமான்கள் திருடிய 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது.!

தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திக்குளம், கோவில்பட்டி மற்றும் மணியாச்சி உட்கோட்ட பகுதியில் உள்ள  கோவில்கள் உட்பட 12 கோவில்களில் தங்க நகை மற்றும் வெள்ளி சாமான்கள் திருடிய 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது  - ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள 20 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் மீட்பு -  கைது செய்த தனிப்படை போலீசாருக்கு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  பாராட்டினார்.

கடந்த 10.08.2021 அன்று விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீரான் பாளையம் தெருவில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் கர்ப்பகிரகத்தில் உள்ள சாமி கழுத்தில் அணியப்பட்டிருந்த 5 பவுன் தாலிசெயினை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுள்ளனர். 


இதுகுறித்து மேற்படி கோவில் நிர்வாகியான விளாத்திகுளம் மீரான் பாளையத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் காளியப்பன் (57) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

தொடர்ந்து தனிப்படையினர் திருடியவர்கள் யாரென கண்டுபிடிக்க கோவில் மற்றும் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். 

அதில் இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் கோவில் பகுதிகளில் செல்வதும், வருவதுமாக இருப்பது தெரியவந்தது. அதில் காணப்பட்ட அடையாளங்கள் மற்றும்  வாகன எண்ணை வைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்ததில் 

கோவில்பட்டி தட்சினாமூர்த்தி தெருவைச் சேர்ந்த  கணேசபாண்டியன் மகன் 1) கண்ணன் (43), கோவில்பட்டி டால்துரை பங்களாத்தெருவைச் சேர்ந்த சண்முகவேல் மனைவி 2) செண்பகவள்ளி என்ற ராணி (55) மற்றும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஈச்சந்தா என்ற பகுதியைச் சேர்ந்த அருட்செல்வம் மனைவி 3) சண்முகசுந்தரி (32) ஆகிய 3 பேரும் இரு சக்கர வாகனத்தில் வந்து திருடியது தெரியவந்தது.

இன்று விளாத்திகுளத்திலிருந்து எட்டையபுரம் செல்லும் ஆற்று பாலத்தின் அருகே வாகன தணிக்கை செய்யும்போது மேற்படி திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேரை பிடித்து, 

விளாத்திக்குளம் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்ததில், மேற்படி எதிரிகள் 10.08.2021 அன்று மேற்படி விளாத்திக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீரான் பாளையம் தெருவில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோவிலில் சாமியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலிச் செயினையும், 

08.08.2021 அன்று வேம்பார் சாலையில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் பொட்டுத்தாலியையும், 04.02.2021 அன்று எட்டயாபுரம் காவல நிலைய எல்லைக்குட்பட்ட இளம்புவனத்தில் உள்ள பூமாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்களிடமிருந்து தங்க நகைகள் திருடியதாக 4 வழக்குகளுடம்,

 14.04.2021 அன்று முத்தலாபுரம் சிவன் கோவிலில் பொட்டுத் தாலி திருடியதும்,  16.03.2021 அன்று எட்டயாபரம் மேலநம்பியாபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் சாமியின் வெள்ளி கிரீடம் திருடியதும், 05.08.2021 அன்று பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செவல்பட்டி பத்திரகாளியம்மன் கோவிலில் பொட்டுத் தாலி திருடியதும், 

10.08.2021 அன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மந்தித்தோப்பு கருமாரியம்மன் கோவிலில் பொட்டுத் தாலி திருடியதும், 20.07.2021 அன்று ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்காணி ஆதிபரமேஸ்வரி அம்மன் கோவிலில் பொட்டுத்தாலி திருடியதும் மற்றும் 

இதுபோன்று திருநெல்வேலி தாழையூத்தில் ஒரு கோவிலில் திருடியதும் ஆக மொத்தம் 12 கோவில்களில் திருடியதை ஒப்புக்கொண்டனர். அதனடிப்படையில் தனிப்படை போலீசார் அவர்கள் திருடிய ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள 20 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் மற்றும் திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

கைதான தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரி என்பவர் மீது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு செண்பகவள்ளியம்மன் கோவிலில் நகைகளை திருடியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு தண்டணை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்து, தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.

Previous Post Next Post