செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 50 சதவிகித மாணவர்களுடன் பள்ளிகளை இயக்க அரசு முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்
தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளை அளிக்கலாமா அல்லது கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா என்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் தமிழகத்தில் இரண்டு வாரங்களுக்கு (வரும் 23 ஆம் தேதி வரை) கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிக அளவில் பொதுமக்கள் கூடுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இறைச்சி மீன் கடைகளில் மக்கள் அதிகம் கூடுவதை தடுக்க திறந்தவெளியில் தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் கடையை தவிர மற்ற செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, ஏற்கனவே உள்ள விதிமுறைகளை பின்பற்றாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 50 சதவிகித மாணவர்களுடன் பள்ளிகளை இயக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி செல்லாமல் குழந்தைகள் வீட்டிலேயே இருப்பது குழந்தைகளுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால் பள்ளி மாணவர்கள் இடையே பெரும் கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.