தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கே.டி.எம். மஹாலில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் டி.என்.பி.எஸ்.சி. தொகுதி 1 போட்டி தேர்வுகளுக்கு பயிலும் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது.
முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ், கலந்துகொண்டு துவக்கி வைத்தார்கள். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் குரூப் 1, குரூப் 2 தேர்வுகளுக்கு தயாராவதற்காக மனுக்கள் அளித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் ஜூம் செயலி மூலம் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
அதனடிப்படையில் இன்றைய தினம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து திருச்செந்தூரில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1, குரூப் 2 தேர்வுக்கு மாணவர்கள் தயாராவதற்கு பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.
மேலும், மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளுக்கான வழிமுறைகளும், அதேபோல ஆன்லைன் வகுப்புகளும், நேரடி வகுப்புகளும் தொடர்ந்து நடைபெறும். கொரோனா நோய் தொற்றின் காரணமாக கடந்த 2 வருடமாக எந்தவிதமான போட்டி தேர்வுகளும் நடைபெறவில்லை. வருடத்திற்கு 250 போட்டி தேர்வுகள் உள்ளது.
அனைத்து போட்டி தேர்வுகளிலும் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் இதுபோன்ற நிகழ்ச்சிகளின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் ஒரு தேர்வினை மட்டுமே எழுதாமல் அனைத்து தேர்வுகளும் எழுதும் வகையில் பயிற்சி பெற்று தேர்வில் வெற்றி பெற வேண்டும்.
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தின் மூலம் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் துண்டு பிரசுரம் வழங்கப்பட உள்ளது. குரூப் 1, குரூப் 2 தேர்வுகளுக்கு பங்குபெற நினைக்கும் மாணவ, மாணவிகள் துண்டு பிரசுரத்தில் கியுஆர் கோடு இருக்கும்.
அந்த கியுஆர் கோட்டில் மாணவர்கள் ஸ்கேன் செய்தால் வேலைவாய்ப்பு அலுவலத்தின் வாட்ஸ் அப் குழுவில் இணைந்து ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்படும். இதன் மூலம் மாணவர்கள் போட்டி தேர்வுக்கு தயாராகலாம்.
இதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு ஊரிலும் குறிப்பாக கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற நினைக்கும் சுமார் 50 மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இன்று நடைபெற்ற போட்டி தேர்வு பயிற்சி முகாமில் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாத்தான்குளம், கோவில்பட்டி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கலந்துகொண்டுள்ளார்கள்.
கொரோனா நோய் தொற்று காலம் என்பதால் மாணவர்கள் அனைவரும் நூலகம் மற்றும் பல்வேறு பொது இடங்களுக்கு போட்டி தேர்வுக்கு செல்ல இருக்கும் காரணத்தினால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்கள் அனைவரும் நன்கு பயின்று அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு பெற வேண்டும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் போட்டி தேர்வு பயிற்சி முகாமில் கலந்துகொண்ட மாணவர்கள் தானாக முன்வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசியினை செலுத்திக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கோகிலா, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு அலுவலக உதவி இயக்குனர் பேச்சியம்மாள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரம்யா, வட்டாட்சியர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டார்.