தூத்துக்குடி மாவட்டம், தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரையண்ட் நகர் 5 வது தெருவில் கல்யாணசுந்தரம் என்பவர் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் சுங்க கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கல்யாணசுந்தரம், அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் மேற்படி பிரையண்ட் நகரில் உள்ள அவர்களது வீட்டை பூட்டிவிட்டு 25.07.2021 அன்று சென்னை சென்றுள்ளனர்.
இன்று காலை கல்யாண சுந்தரம் மட்டும் சென்னையிலிருந்து திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் அவர் வீட்டிற்கு வந்து பார்க்கும்போது வீட்டின் கதவு உடைக்கபட்டு, பீரோவை உடைத்து அதிலிருந்த சுமார் 70 பவுன் நகைகள் வரை திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் வீட்டில் இருந்த சி.சி.டி.வி கேமராவின் மானிட்டரையும் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவுசெய்து சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை அறிய கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு, தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில்
தென்பாகம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையில் முதல் நிலை காவலர்கள் பென்சிங், மாணிக்கராஜ்,சாமுவேல், மகாலிங்கம்,செந்தில், திருமணி மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து எதிரியை விரைந்து கைது செய்து உத்தரவிட்டுள்ளார்.