ஜூலை 31ம் தேதிக்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலை இயங்க அரசு அனுமதிக்க கூடாது - ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு குழுவினர் கோரிக்கை.!


தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக மனு அளிப்பதற்காக நூற்றுக்கணக்கானோர் வர இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதால் ஆட்சியர் அலுவலக வளாகம் மிக பரபரப்பாக காணப்பட்டது.

தூத்துக்குடி - திருநெல்வேலி பிரதான சாலையில் கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் ஆட்சியர் அலுவலக நுழைவு பகுதிகளில் போலீசார் வஜ்ரா வாகனங்கள் நிறுத்தப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. 


மேலும், அலுவலக பிரதான வாயிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு ஆட்சியர் அலுவலத்திற்கு வருபவர்கள் கடும் சோதனைக்கு பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை ஜூலை 31ம் தேதிக்கு பிறகு தொடர்ந்து இயங்க தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது என ஓருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை முன் வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று 200க்கும் மேற்ப்பட்டோர்  முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.


பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போலிசார் தடுப்பு வேலிகளை அமைத்து 20 பேரை மட்டும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதியளித்தனர். அதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது. 

தொடர்ந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள் உட்பட 20 பேர் மட்டும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜை சந்திந்து மனு அளித்தனர்.


தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் கொரோனா பெருந்தொற்று மிகவும் குறைந்து வரும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாத நிலையில் 

தமிழக அரசால் நிரந்தரமாக மூடப்பட்ட ஸ்டெர்லைட் நச்சு ஆலையிலிருந்து ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்கப்பட்ட ஜீலை 31-ம் தேதியை கடந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதிக்க கூடாது.

முதலமைச்சர் வாக்குறுதி அளித்தபடி நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றிட வேண்டும். இது தொடர்பாக சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். 

தூத்துக்குடி படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட்  துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து அரசு பணி கிடைக்காது விடுபட்டவர்கள் அனைவருக்கும் அரசுப் பணி வழங்கிட வேண்டும். 

போராட்டத்தில் படுகொலையுண்ட 15 தியாகிகளின் நினைவாக தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் நினைவகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous Post Next Post