தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடித்தனம், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து தீவிர நடவடிக்கை எடுக்க அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்று தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையில்
உதவி ஆய்வாளர் வேல்ராஜ், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் பூலைய்யா நாகராஜ் மற்றும் முதல் நிலைக் காவலர்கள் பென்சிங், மாணிக்கராஜ், சாமுவேல், மகாலிங்கம், செந்தில்,திருமணி மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய
தனிப்படையினர் தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டதில் தூத்துக்குடி பீச் ரோட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த சில்வர்ஸ்டார் மகன் ஜீடுஸ்குமார் (29), தூத்துக்குடி மட்டகடை பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மரிய அந்தோணி சகிலன் (24) மற்றும் தூத்துக்குடி எஸ்.எஸ் பிள்ளை தெருவைச் சேர்ந்த சந்தன ராஜ் மகன் பேச்சிமுத்து (28) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில்
தூத்துக்குடி சின்னக்கடை தெரு பகுதி மற்றும் தூத்துக்குடி சந்தியப்பர் கோவில் தெருவைச் சேர்ந்த இருவரை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. உடனே தனிப்படை போலீசார் மேற்படி 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து அரிவாளையும் பறிமுதல் செய்தனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட எதிரிகள் ஜீடுஸ்குமார் என்பவருக்கு தூத்துக்குடி வடபாகம் மற்றும் தூத்துக்குடி தென்பாகம் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உட்பட 7 வழக்குகளும், எதிரி மரிய அந்தோணி சகிலன் என்பவருக்கு தூத்துக்குடி வடபாகம்,
தூத்துக்குடி மத்தியபாகம், ஏரல் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உட்பட 10 வழக்குகளும் மற்றொரு எதிரி பேச்சிமுத்து என்பவர் மீது தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடிகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.