அதிகாரத்தை எதிர்த்தால், வன்முறை ஏவப்படுகிறது!! - கனிமொழி எம்பி பேச்சு.!


தூத்துக்குடி: அதிகாரத்தை எதிர்த்தால், அவர்கள் மீது வன்முறை ஏவப்படுகிறது. இதை மக்கள் மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு கடந்து சென்று விடுகின்றனர் என தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி தெரிவித்தார். 

கடந்த ஆண்டு சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் சித்திரவதைச் செய்யப்பட்டு உயிரிழந்தனர். காவல் துறையினரால் படுகொலை செய்யப்பட்டு ஓராண்டு நிறைவுற்றதை முன்னிட்டு காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் ( தமிழ்நாடு/ புதுச்சேரி ) சார்பாக இணைய வழியில் நடந்த நினைவேந்தல் நாள் கருத்தரங்கில், சாத்தான்குளம் பிரகடனம் வெளியிடப்பட்டது.

'உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் நித்யா ராமகிருஷ்ணன், சாத்தான்குளம் பிரகடனத்தை வெளியிட, தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணித்தலைவருமான கனிமொழி அவர்கள் பெற்றுக்கொண்டார். பிரகடனத்தை ஏற்றுக்கொண்டு, கனிமொழி நிறைவுரை ஆற்றினார். சாத்தான்குளம் பிரகடனத்தைச் செவ்வனே உருவாக்கியதற்காகக் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்திற்குப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

கனிமொழி எம்பி மேலும் பேசியதாவது: "காவல்நிலையத்தில் நடப்பவை நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. அது குறித்து எந்த பதிவும் இருப்பதில்லை. பெண்கள், தலித்துகள், ஆதிவாசிகள் என யாராக இருந்தாலும் அதிகாரத்தை எதிர்த்தால், அவர்கள் மீது வன்முறை ஏவப்படுகிறது. அப்படி மனித உரிமைக்காகக் குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எந்தக் குற்றத்தை வேண்டுமானாலும் அவர் மீது சுமத்தி, அவர்களைக் கைது செய்யக்கூடிய நடவடிக்கை இன்று நிலவுகிறது. தவிரவும், அவர்கள் மீது வன்முறையும் ஏவப்படுகிறது. அப்படி ஏவப்படும் வன்முறையை ஏற்கத்தக்க மனநிலைதான் மக்களிடையே நிலவுகிறது.

காவல்நிலையங்களில் சித்ரவதை பாதிக்கப்பட்டவர்கள் மீது ஏதாவது முன்கூட்டியே குற்றச்சாட்டு இருந்தால், அவர்கள் மீது வன்முறை ஏவப்படுவது இயல்பான ஒன்றாகி விடுகிறது. இதை மக்கள் மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு கடந்து சென்றுவிடுகின்றனர். காவல் நிலையங்களிலும், சிறைகளிலும், விசாரணை இடங்களிலும் சித்திரவதை நிலவுவதை ஏற்க இயலாது. இந்த நிலை மாறவேண்டும்.

திரைப்படங்களில் காவல்துறை குறித்துக் காட்டுகின்ற பொழுது, அவர்கள் சர்வ சாதாரணமாக மக்களை அடிப்பது போலக் காட்டுகிறார்கள். மக்களும் அதை அப்படியே அமைதியாக ஏற்றுக் கொள்கிறார்கள். கொரோனாத் தொற்று நோய் பாதிக்கப்பட்ட தொடக்கத்தில், கடந்த காலத்தில் மக்கள் மீது காவல்துறை தாக்குதல் தொடுத்ததை வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருந்து, மக்கள் அதைக் கடந்து சென்று விட்டார்கள். இந்நிலை மாற வேண்டும்.

காவல்துறை சித்திரவதை மரணங்கள், சாத்தான்குளத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலும், உலகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவதைப் பார்க்கிறோம். குறிப்பாக இந்தியாவில் இன்று அச்சம் நிலவும் சூழ்நிலை இருக்கிறது. எனவே இத்தருணத்தில் சாத்தான்குளம் பிரகடனம் வெளியிடப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானதாகும். காவல்துறை மரணங்கள் மற்றும் சித்திரவதைகளை ஒருக்காலும் ஏற்க முடியாது. அதை மாற்றும் காலம் வந்திருக்கிறது.

மனித உரிமைகள் குறித்துக் காவல்துறையினருக்கும் நீதிபதிகளுக்கும் விழிப்புணர்வு ஊட்டவேண்டும். இன்று இருக்கும் நிலையை மாற்றும் வரை தொடர்ந்து போராட வேண்டும். அதற்காக ஒரு பண்பாட்டு மாற்றம் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட பண்பாட்டு மாற்றம் உடனடியாக நடக்காது. நாம் எல்லோரும் இணைந்துதான் அப்படிப்பட்ட மாற்றத்தை உருவாக்க வேண்டும்.

காவல் சித்திரவதைகள் தடுக்கப்பட வேண்டும். இவை தொடர முடியாத சூழலையும் நாம் உருவாக்க வேண்டும். இதற்கான மாற்றத்தைக் கொண்டுவர பல்வேறு அமைப்புகள் இணைந்து போராடுவதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சித்திரவதை இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்கும், அந்த மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும் என்றும் நான் உங்களுக்கு உதவுவேன். உங்கள் சார்பாக நிற்பேன் என உறுதி கூறிக் கனிமொழி விரிவான நிறைவுரை ஆற்றினார். 

வீரப்பன் தேடுதல் வேட்டை மற்றும் சாத்தான்குளம் படுகொலை ஆகியவை குறித்த பாடல்களும், காணொளிக் காட்சியும் இந்நிகழ்வில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இணைய வழியில் ஏறக்குறைய 7,000 பேர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post