திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளம் அணுமின் நிலையம் 5வது மற்றும் 6வது அணு உலைக்கான கான்கிரீட் பணி இன்று தொடங்கியது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி
அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் இன்று மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை தூத்துக்குடியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுப.உதயகுமார், கூடங்குளம் அணு உலை ஏற்கனவே பழுது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல நேரங்களில் செயல்படாத நிலையில் தற்போது 5வது 6வது அணு உலை விரிவாக்கத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழக மக்களுக்கு கேடு விளைவிக்கக் கூடிய இந்த திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய இந்த கூடங்குளம் அணு உலையை முழுவதுமாக இழுத்து மூட வேண்டும்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக மூன்று ஆண்டுகளாக மக்கள் ஒன்று திரண்டு போராடினர் மக்களின் கோரிக்கையை அப்போதைய மத்திய அரசும் மாநிலத்தில் இருந்த அதிமுக அரசு மதிக்கவில்லை. இந்த அழிவு திட்டத்தை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம்.
சேலம் எட்டு வழி சாலை, ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்ற திட்டங்களை தமிழக அரசு தடுத்து எதிர்த்து வருகிறது . அந்த வகையில் கூடங்குளம் அணு உலையும் தமிழக அரசு எதிர்க்க வேண்டும். நாங்கள் தொடர்ந்து எங்களின் வாழ்வுரிமைக்காக வாழ்வாதாரத்திற்காக குரல்கொடுப்போம் தேவைப்பட்டால் களம் இறங்கி போராடுவோம் என்றார்.