சென்னை கலைவாணர் அரங்கில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று பத்திரிகையாளர் சங்கங்களின் நிர்வாகிகள் கோரிக்கையை கேட்கும் விதமாக கலந்தாய்வு நிகழ்வு நடத்தினார்.
துறை செயலாளர் மகேசன் காசிராஜன், இயக்குனர் முனைவர். வீ.ப.ஜெயசீலன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கலந்தாய்வில், தி நேஷனல் யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் (இந்தியா) சார்பில் மாநில துணை தலைவர் எஸ். மணிகண்டன், துணை செயலாளர் கே.விஜய், மகிளா பிரிவு செயலாளர் ராஜேஸ்வரி ஆகியோர் பங்கேற்று பத்திரிகையாளர் கோரிக்கைகளை வலியுறுத்தினோம்.
அப்போது, ' புருஸ்ஸல்சில் உள்ள இன்டர்நேஷனல் பெடரேஷன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் என்ற உலகளாவிய அமைப்பின் அங்கமான எமது தி நேஷனல் யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் (இந்தியா) வின் செயல்முறை திட்டங்கள் விளக்கி கூறப்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாடு அரசு பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்தமைக்கும், நிவாரண நிதி ரூ.5000 வழங்கியமைக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டம் இயற்றிடவும், பத்திரிகையாளர் நலவாரியம் அமைத்திடவும் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழ்நாடு அளவில் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தமிழக அரசின் வீட்டுமனைகளை விரைந்து வழங்கிட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இத்துடன் பத்திரிகை துறையில் போலிகளை களையும் விதமாக, சென்னை உள்பட மற்ற மாவட்டங்களில் தாலுகா/ ஏரியா செய்தியாளர்களுக்கு அடையாள அட்டைகள், வாகன ஒட்டு வில்லை வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இத்துடன், வார மாத இதழ்கள், சிற்றிதழ்கள் அனைத்தினையும் முறைப்படுத்தி, அங்கீகாரம் வழங்கவும், இவ்வாறு முறைப்படுத்தி அங்கீகாரம் வழங்குவதன் மூலம் போலிகள் இல்லாத பத்திரிகை உலகம் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தோம்.
சிறு, குறு பத்திரிகைகளுக்கு தமிழ்நாடு அரசு விநியோக எண்ணிக்கை அளவுக்குப் ஏற்ப விளம்பரங்கள் அளித்திட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தோம். தமிழ்நாடு அரசின் அங்கீகார கமிட்டி உள்ளிட்ட கமிட்டிகளில் சங்கங்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கோரினோம்.
உழைக்கும் பத்திரிகையாளர் நலச்சட்டத்தின் 5 எப் பிரிவு யாரையெல்லாம் உழைக்கும் பத்திரிகையாளர் என்று வரையறுக்கிறதோ, அவர்களுக்கு மட்டுமே தமிழ்நாடு அரசின் சலுகைகளை வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தோம். எமது கோரிக்கைகளை கனிவுடன் கேட்டுக் கொண்ட அமைச்சர் நிச்சயம் பரிசீலித்து நிறைவேற்றி தருவதாக அமைச்சர் உறுதியளித்தார்.