சி.ஐ.ஐ., அமைப்பு சார்பில், முன்னெடுக்கப்பட்ட நிகழ்வில் திருப்பூரில் முதல்முறையாக 1200 பனியன் தொழிலாளர்களுக்கான கொரோனா தடுப்பூசியினை இலவசமாக போடுவதற்கு பனியன் நிறுவனமே பணம் செலுத்தி உள்ளது.
சி.ஐ.ஐ., என்கிற அகில இந்திய தொழில் கூட்டமைப்பு அமைப்பானது, தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிறுவனத்தின் செலவில் இலவச தடுப்பூசி போட வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. அந்த அடிப்படையில், திருப்பூர் பூலுவப்பட்டியில் உள்ள எஸ்.டி., எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன தொழிலாளர்கள் 1200 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்வு இன்று துவங்கியது.
இந்நிகழ்வினை திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு ஆர்.டி.ஓ., ஜெகநாதன், தாசில்தார் ஜெகநாதன், சி.ஐ.ஐ., தலைவர் திருக்குமரன், கிளாசிக் சிவராமன், சி.ஐ.ஐ., முன்னாள் தலைவர் வெங்கடேஷ், பிரித்வி பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
தொடர்ச்சியாக எஸ்.டி.,எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன தொழிலாளர்கள் அனைவருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்றன. இதுகுறித்து, சி.ஐ.ஐ., தலைவர் திருக்குமரன் கூறுகையில், பனியன் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக பணம் செலுத்தி விடுவதன் மூலம் அரசின் சுமை குறைவதுடன், தொழிலாளர்களுக்கு தடுப்பூசி இலவசமாக கிடைக்கும். இதனால் கொரோனா நோயை முழுமையாக ஒழிக்க முடியும். இதற்கு முன்னுதாரணமாகவே இந்த நிகழ்ச்சி இங்கு நடக்கிறது. தொடர்ச்சியாக பல்வேறு நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட இருக்கிறார்கள். என்றார்.