துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ. 2 கோடியே 6 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ தங்கம் பறிமுதல் 6 பேர் கைது
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. இந்த விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி கொண்டே வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருந்த சென்னையை சேர்ந்த பர்கத் பாஷா(36), சக்லா சர்தார்(55), கடலூரை சேர்ந்த சாகுல் அமீது(39), சேலத்தை சேர்ந்த சையத் அகமது(26), ராமநாதபுரம் எஸ்.பி.பட்டிணத்தை சேர்ந்த முகமது பைசூல்(24), ராமநாதபுரம் பாசிப்பட்டிணத்தை சேர்ந்த ஆதாம்(41) ஆகிய 6 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில் கருப்பு நிற டேப் ஒட்டப்பட்ட 2 பெட்டலங்கள் இருந்தன. அவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 6 பேரிடம் இருந்து ரூ. 1 கோடியே 39 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 700 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
அதுப்போல் துபாயில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தில் பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பின் விமானத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் ஏறி சோதனை செய்தனர். அப்போது விமானத்தில் ஒரு இருக்கையின் அடியில் 2 பெட்டலங்களை கைப்பற்றினார்கள். அதை பிரித்து பார்த்தபோது அதில் தங்க கட்டிகள் இருந்தன. ரூ. 67 லட்சத்தி 25 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 300 கிராம் தங்க கட்டிகளை கைப்பற்றினார்கள். தங்க கடத்தி வந்தவர்கள் சுங்க இலாகா அதிகாரிகள் நடவடிக்கைக்கு பயந்து வைத்து சென்றார்களா. அல்லது ஊழியர்கள் உதவியுடன் கடத்தல் தங்கத்தை வெளியே கொண்டு வர திட்டமிட்டார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே நாளில் ரூ. 2 கோடியே 6 லட்சத்தி 25 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.