16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:


கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.


அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.


நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை சுமார் 50,000ல் இருந்து தற்போது 25,000 நபர்கள் என்ற அளவிற்கு குறைந்து உள்ளது.


நான் பல்வேறு தினங்களில் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட 12 ஒருங்கிணைப்புக் குழுக்களின் கருத்துக்களின் அடிப்படையிலும், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் கருத்துகளின் அடிப்படையிலும், தமிழ்நாட்டில் 31.10.2020 முடிய பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.


பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், 28.10.2020 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், தற்போதுள்ள நோய் பரவல் நிலையைக் கருத்தில் கொண்டு கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 31.10.2020 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் கீழ்க்கண்ட தளர்வுகளுடன், 30.11.2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது:


1) பள்ளிகள் (9, 10, 11, மற்றும் 12-ஆம் வகுப்புகள் மட்டும்), அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் 16.11.2020 முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.


2) பள்ளி கல்லூரிகள் மற்றும் பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் 16.11.2020 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. 3) கோயம்பேடு வணிக வளாகம்:


3) கோயம்பேடு வணிக வளாகம்:


தற்காலிக இடத்தில் தற்போது செயல்படும் பழக்கடை மொத்த வியாபாரம், 2.11.2020 முதலும், பழம் மற்றும் காய்கறி சில்லரை வியாபாரக் கடைகள் மூன்று கட்டங்களாக 16.11.2020 முதலும் கோயம்பேடு அங்காடி வளாகத்தில், அரசால் வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, செயல்பட அனுமதிக்கப்படுகிறது.


4) பொதுமக்களுக்கான புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து சேவை (Sub urban trains) மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.


5) சின்னத்திரை உட்பட திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஒரே சமயத்தில் 150 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. படப்பிடிப்பின் போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.


திரையரங்கு உரிமையாளர்களிடமிருந்து திரையரங்குகளை திறக்க வரப்பெற்ற கோரிக்கைகளை பரிசீலித்து, தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் அரசால் வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவற்றை திரையிட்டும், ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள் (multiplex), வணிக வளாகங்களில் (shopping malls)


உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளும் 50 சதவீதம் இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி 10.11.2020 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.


7) மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் இவை தொடர்பான கூட்டங்கள் 16.11.2020 முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 100 நபர்கள் பங்கேற்கும் வகையில், நடத்த அனுமதிக்கப்படுகிறது.


8) பொழுதுபோக்கு பூங்காக்கள் (Entertainment / Amusement Parks), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 10.11.2020 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.


9) நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, திருமண நிகழ்வுகளுக்கு 100 நபர்களுக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களுக்கு 100 நபர்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது.


10) ஏற்கெனவே 50 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 1.11.2020 முதல் 60 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்க அனுமதிக்கப்படுகின்றன.


பொது தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.


• நீச்சல் குளங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள்


மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.


வெளி மாநிலங்களிலிருந்து (புதுச்சேரி மாநிலம் தவிர) தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கும், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு செல்பவர்களுக்கும் தற்போது நடைமுறையிலுள்ள இ-பதிவு (E-registration) முறை, தொடர்ந்து அமல்படுத்தப்படும்.


தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும், அதனை முழுமையாக தடுக்கவும், நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். குறிப்பாக நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில், பொதுமக்கள் பண்டிகை காலங்களில் அதிகமாக கூடுவதை தவிர்த்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.


பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் முககவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும்


அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், வெளியிடங்களுக்கு முககவசத்தை அணிந்து சென்றும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றுப் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும்.


எனவே, பொது மக்களின் நலன் கருதி, உங்கள் அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொது மக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நோய் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்பையும், நோய் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு, எஞ்சியுள்ள கட்டுப்பாடுகளுக்கும் தேவைக்கேற்ப தளர்வுகள் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார். 


 


 


 


 


Previous Post Next Post