மக்கள் எதிர்ப்பை மீறி பேரணாம்பட்டு பேருந்து நிலையத்தை நகருக்கு வெளியே மாற்றும் திட்டத்தை கைவிட வேண்டும் -எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்


 

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் அம்ஜத் பாஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

 

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் நகரின் மையப்பகுதியில்  60 ஆண்டு காலமாக பேருந்து  நிலையம் இயங்கி வருகின்றது.  3 மாநிலங்களை ஒட்டி தமிழக எல்லையில் பேரணாம்பட்டு நகரம்  அமைந்துள்ளதால் ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் இருந்து வர்த்தக  நோக்கிற்காகவும், குடும்ப உறவுகளை தேடியும் பேரணாம்பட்டிற்கு   ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து செல்கின்றனர். சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும்  விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்காக பேரணாம்பட்டு வந்து செல்கின்றனர்.  நகரை சுற்றியுள்ள 25 கிராமங்களை சேர்ந்த மக்கள், பள்ளி, கல்லூரி  மாணவர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் இங்கு வந்து செல்கின்றனர். நகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் உள்ளதால் மக்களின் பயன்பாட்டுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகளை அகற்றினால் பயணிகள் பயன்பாட்டுக்கு இன்னும் வசதியாக இந்த பேருந்து நிலையத்தை மாற்றலாம். இது பேரணாம்பட்டு மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. 

 

இந்நிலையில் நகரின் மையப்பகுதியில் இயங்கிவரும் பேருந்து நிலையத்தை நகருக்கு வெளியே 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பங்களாமேடு பகுதிக்கு அதனை இடமாற்றம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பங்களாமேடு பகுதியில் உள்ள சில ரியல் எஸ்டேட் அதிபர்களின் நலனுக்காக அவர்களின் நிலங்களை விற்பனை செய்வதற்காக இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.  மேலும், பொதுமக்களும், வணிகர்களும் பேருந்து நிலைய மாற்றத்துக்கு எதிர்ப்புகளை தெரிவித்து திட்டத்தை கைவிட கோரிக்கை விடுத்தனர். புதிய பேருந்து நிலைய திட்டத்தை கைவிட வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாகவும் கண்டன ஆர்ப்பாட்டமும், பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றது. ஆனால்,  மக்களின் கோரிக்கையை புறக்கணித்து புதிய பேருந்து நிலையத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று தீர்ப்பு நிலுவையில் உள்ள நிலையில், திடிரென மிக அவசரமாக சில அரசியல் அழுத்தங்கள் மூலம் பங்களாமேட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  பேரணாம்பட்டு நகராட்சி ஆணையர் மற்றும் நகரமைப்பு ஆய்வாளர் ஆகியோர்களின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இந்த நடவடிக்கை நீதிமன்ற அவமதிப்பாகும். ஆகவே, உடனடியாக புதிய பேருந்து நிலைய கட்டுமானத்திற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுகொள்கின்றேன்.

 

பேரணாம்பட்டில் தற்போது நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திற்கு அருகில் அரசு மருத்துவமனை, அரசு பள்ளி, தபால்  அலுவலகம், பஜார், வங்கிகள், வணிக வளாகங்கள் ஆகியவை இருப்பதால்  அனைத்திற்குமே வசதியாக உள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத பங்களாமேடு பகுதி, மாணவர்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் நிறைந்த பகுதியாகும்.  இதனால்  பங்களாமேட்டில் அமையும் பேருந்து  நிலையத்தால் பொதுமக்களுக்கு எவ்வித பயன்பாடும் இருக்காது.

 

ஆகவே, சில தனியார் ரியல் எஸ்டேட் அதிபர்களின் நலனுக்காக பேரணாம்பட்டு பேருந்து நிலையத்தை நகரின் வெளிப்பகுதிக்கு மாற்றும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். இல்லாவிட்டால் எஸ்.டி.பி.ஐ. கட்சி மக்களை திரட்டி மிகப்பெரும் அளவில் போராடும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

 

இவ்வாறு எஸ்.டி.பி.ஐ. மாநில துணை செயலாளர். எ.அம்ஜத் பாஷா அவர்கள்  அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post