மொழி திணிப்பை பா.ம.க. எதிர்க்கும் - மாநில பொருளாளர் திலகபாமா


 

இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு நினைவு தூண் வைத்து வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி கோவில்பட்டியில் பா.ம.க. சார்பில் நடந்தது. 

 

மாநில துணை பொதுசசெயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மத்திய மாவட்ட செயலாளர் சின்னத்துரை, மாவட்ட செயலாளர் பரமகுரு, மாவட்டத்தலைவர் இ.மாடசாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சு.வேல்ச்சாமி வரவேற்றார். 

 

மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா கலந்து கொண்டு, இடஒதுக்கீடு போராட்டத்தில் உயர் நீத்த தியாகிகளின் நினைவு தூணுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில், மத்திய மாவட்ட அமைப்பு செயலாளர் இசக்கிவேல், வடக்கு மாவட்ட அமைப்புச்செயலாளர் காளிராஜ், நகர செயலாளர் கருப்பு என்ற கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

பின்னர் கவிஞர் திலகபாமா செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்தாண்டு தமிழகம் முழுவதும் பா.ம.க. சார்பில் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் 2021-ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்தப்பட்டு, 

 

அனைத்து சமுதாயத்தினருக்கும் கல்வி, வேலை வாய்ப்புகள் சமமாக பங்கீடப்பட வேண்டும். இடஒதுக்கீடு என்றே சொல்கிறோம். அதனை இடப்பங்கீடு வழங்கப்பட வேண்டும். இது சமூக நீதியை காக்க உதவும் என்பதை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது.

 

தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் பா.ம.க. உள்ளது. தேர்தல் கூட்டணி தொடர்பான முடிவுகளை பொதுக்குழு கூடி முடிவெடுக்கும். அனைத்து மொழிகளும் எங்களது நேசத்துக்குரியது தான். ஆனால், மொழி திணிப்பு வேண்டாம் என பா.ம.க. கூறி வருகிறது. ஒரு மொழியை கற்றுக்கொள்வதையோ, தெரிந்துகொள்வதையோ யாரும் நிராகரிக்கவில்லை.

 

ஆனால், மொழி திணிக்கப்படுகிறது, அரசு மொழியாக்கப்படுகிறது, எங்கள் தாய் மொழியின் அங்கீகாரம் குறைத்து மதிப்பிடப்படுமானால், அதை எதிர்க்கும் முதல் ஆளாக பா.ம.க. இருக்கும், என்றார் அவர்.

Previous Post Next Post