வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி மலையில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. காவல்துறையினர் தொடர்ந்து சோதனைகள் நடத்தி கள்ளச்சாராய ஊரல்களை அழித்து வருகிறார்கள். இந்நிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் காவலர்கள் 7 பேர், அல்லேரி மலைக்கு சென்று அங்குள்ள பகுதிகளில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சாராய வியாபாரி கணேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் 10 பேர் காவல்துறையினர் மீது பயங்கர ஆயுதங்களை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். அரிவாளால் வெட்டியதில் காவலர் அன்பழகன் மற்றும் ராகேஷ் ஆகியோர் படுகாயங்களுடன் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சிவகுமார், நெஞ்சுவலி காரணமாக அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். காவல்துறையினரை வழிமறித்து கள்ளச்சாராய கும்பல் சரமாரியாக தாக்கியது வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய கும்பலை கைது செய்ய 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து அல்லேரி மலைப்பகுதிக்கு வேலூர் ஏ.டி.எஸ்.பி. மதிவாணன் தலைமையில், 90 காவலர்கள் அடங்கிய குழுவினர் விரைந்துள்ளனர்.
Tags:
மாவட்ட செய்திகள்