தென்காசியில் கண்ட இடங்களில் வால்போஸ்டர் ஒட்ட தடை அனைத்துதுறை அதிரடி நடவடிக்கை


 

தென்காசி நகராட்சி பகுதியினை தூய்மைப்படுத்தும் வகையில் 4 இடங்களில் மட்டுமே சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு அனுமதிக்கப்படுகிறது என காவல்துறை, நகராட்சி, வருhவாய்த்துறை சார்பில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 

தென்காசி நகராட்சி பகுதியில் உள்ள பெரும்பாலான சாலையோர சுவர்களில் குறிப்பாக அரசுதுறைகளின் கட்டிட சுவர்களில் விளம்பரங்கள், சுவரொட்டிகள் இடம் பெறுகின்றன. இதனால் அப்பகுதி தூய்மையற்றதாக விளங்குகிறது. தென்காசி புதிய பஸ்ஸ்டாண்ட், பழைய பஸ்ஸ்டாண்ட் முழுவதும் சுவரொட்டிகளின் ஆதிக்கம் கொடிகட்டி பறக்கிறது. 

 

இந்நிலையில் தென்காசி நகராட்சியை தூய்மைப்படுத்தும் வகையில் காவல்துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை ஆகியவை சார்பில் கலந்தாய்வு கூட்டம் தென்காசி சுப்பராஜா மகாலில் நடைபெற்றது.

 

கூட்டத்திற்கு தென்காசி டி.எஸ்.பி., கோகுலகிருஷ்ணன், காவல் ஆய்வாளர் ஆடிவேல், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஹசினா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

கூட்டத்தில் வர்த்தக சங்கத்தினர், அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்பினர், பள்ளிகள், கல்லூரிகளின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனத்தினர், காவல்துறை, நகராட்சி, வருவாய்த்துறையினர் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்தில் டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் பேசும் போது, தென்காசி நகரை தூய்மைப் படுத்தும் பணியில் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் தூய்மைக்கு ஆபத்து உள்ளது. சுவரொட்டிகளில் என்ன வாசகம் இடம் பெறப் போகிறது என்பதனை காவல் துறையினரிடம் தெரிவித்து ஆட்சேபனை இல்லை என்பதற்கான சான்று  பெற வேண்டும். இஇதன் பின்ன்ர் நகராட்சி மூலம் கோட்டாட்சி;த் தலைவருக்கு தெரியப்படுத்தி அனுமதி பெற்று அதன்பின்னர்தான் அச்சடிக்கப்பட்டு ஒட்படப்பட வேண்டும். ஆனால் இந்த நடைமுறையை யாரும் பின்பற்றுவதில்லை.

 

தற்போது தென்காசி நகரை தூய்மைப்படுத்தும் வகையில் அனைத்து பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டவும், சுவர் விளம்பரங்கள் செய்யவும் தடை விதிக்கப்பட்டு, புதிய பஸ்ஸ்டாண்ட், பழைய பஸ்ஸ்டாண்ட், கொடிமரம், கீழப்புலியூர் ஆகிய நான்கு இடங்களில்மட்டும் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு தனி இடம் அமைத்துக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

 

மேலும் பஜார்பகுதிகளில் சாலைகளில் கடைகளின் விளம்பர போர்டுகளை வைக்க கூடாது. சாதி, மத மோதல்களை தூண்டும் வகையில் சுவரொட்டிகளோ, டிஜிட்டல் போர்டுகளோ வைக்க கூடாது. விளம்பரம் செய்வதற்கு அதிகளவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துங்கள்.

 

அரசியல் கட்சியினரோ பிற அமைப்பினரோ ஜனநாயக முறையில் போராட்டங்கள் நடத்துவதாக இருந்தால்  அது குறித்து 5 நாட்களுக்கு முன்னர் காவல்துறையினரிடம் தெரிவித்து அனுமதி பெற்றுக்கொள்ளுங்கள். தவிர்க்க முடியாத நிலையில் போராட்டம் நடத்துவது என்றால் காலையில் தகவல் தெரிவித்து அனுமதி பெற்று மாலையில் நடத்துங்கள் என்றார்.

 

காவல் ஆய்வாளர் ஆடிவேல் பேசும் போது, அரசு சுவர்கள் மற்றும் பொது சுவர்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இதற்காக அவற்றில் விழிப்புணர்வு ஓவியங்கள், இயற்கை காட்சிகளை வரையலாம். மேலும் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதலாம். 

கடை வீதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக விளம்பர போர்டுகளை வைக்க வேண்டாம் என்றார்.

 

கூட்டத்தில் தென்காசி புதிய பஸ்ஸ்டாண்ட், பழைய பஸ்ஸ்டாண்ட், கொடிமரம், கீழப்புலியூர்  ஆகிய 4 இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு அனுமதிப்பது என்றும், மற்ற இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டக் கூடாது என்றும், இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

Previous Post Next Post