வாழ்வாதாரம் இழந்த தங்களை அகதிகளாக அறிவிக்க கோரி வாடகை வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் ஆதார், ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் மாதம் முதல் வாகனங்கள் இயக்கப்படாமல் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்நிலையில் சாலை வரி செலுத்தும் முறையிலும் தங்களுக்கு சலுகைகள் வழங்கப்படாத நிலையில் ஆகஸ்ட் மாதம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்து காத்திருந்ததாகவும் தற்போது பழைய நடைமுறையே பின்பற்றப்படுவதால் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறிஉள்ளதாகவும், இ பாஸ் முறையை ரத்து செய்ய கோரியும், மண்டலங்களுக்கு இடையே வாகனங்களை இயக்க அனுமதி அளிக்க கோரியும் இல்லை என்றால் தங்களை அகதிகளாக அறிவிக்க வேண்டும் என திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் வாடகை வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் தங்கள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே வந்த ஓட்டுநர்கள் மண்டியிட்டு தங்களை காப்பாற்ற வேண்டும் என கதறினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து கலைந்து சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.