மதுரை மாவட்டம் பரவை கண்மாயை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர் பேசுகையில்:-
மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டம், பரவை கிராமத்தில் அமைந்துள்ள பரவை கண்மாயின் மொத்தப்பரப்பளவு 402.04 ஏக்கர் மற்றும் கொள்ளளவு 175.57 மில்லியன் கன அடி ஆகும். கண்மாயின் 5 மடைகளின் மூலம் பயன் பெறும் பாசன பரப்பு 366.00 ஏக்கர். இக்கண்மாய்க்கு நீர்வரத்து தோடநேரி கண்மாயின் மடை எண்.3ன் பாசன வாயக்கால் மற்றும் அரசன்குளம் கண்மாயின் மறுகால் வரும் வெள்ள நீர் கொண்டைமாரி ஓடையில் கள்ளிக்குடி அணைக்கட்டிலிருந்து பிரிந்து வரும் வரத்துவாய்க்கால் மூலமும் தண்ணீர் வழங்கப்படுகிறது.
மேலும் கள்ளிக்குடி அணைக்கட்டிலிருந்து பிரிந்து வரும் வரத்து வாய்காலும் தோடநேரி கண்மாயிலிருந்து வரும் பாசன வாய்க்காலும் இணைந்து ஒரே வரத்துகாய்வாயிகிறது.
மேற்கண்ட கண்மாயில் முழுகொள்ளளவிற்கு நீரை தேக்கும் பொருட்டு தற்போது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் நடப்பாண்டு அறிவிப்பில் “வைகை ஆற்றின் குறுக்கே பரவை கண்மாய்க்கு தண்ணீர் வழங்க தேனூர் - கொடிமங்கலம் கிராமத்திற்கு இடையே அணைக்கட்டு அமைக்கும் பணிக்கு ரூ.18.00 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது 2020-2021ம் ஆண்டின் குடிமராமத்து திட்டத்தின் மூலம் ரூபாய் 90.00 இலட்சத்தில் இக்கண்மாயின் வரத்துகால்வாய்களான தோடநேரி கண்மாயின் மடை எண்.3ன் பாசன வாய்க்கால் மற்றும் அரசன்குளம் கண்மாயின் மறுகால் வாய்க்கால்களை புணரமைத்து தூர்வாருதல், உள்ளே உள்ள கருவேலமரங்களை அப்புறப்படுத்துதல், கரையை பலபடுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணிகள் விரைவாக முடிப்பதற்கு கூடுதலாக வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் மாவட்ட நிர்வாகமும், பொதுப் பணித்துறை நடவடிக்கை எடுக்கும். மேற்படி திட்டம் நிறைவேறும் பட்சத்தில் ஒவ்வொரு வருடமும் பரவை கண்மாயின் முழுகொள்ளளவு தண்ணீர் நிரப்ப வழிவகை செய்யப்படும். மாடக்குளம் கண்மாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ரூ.85 இலட்சம் மதிப்பீட்டில் 2019ம் ஆண்டு புணரமைக்கப்பட்டதால் நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது.
இதனால் மக்களுக்கு தேவையான தண்ணீர் கிடைத்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு பழங்காநத்தம் ஊரணியில் தண்ணீர் நிரப்பப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் 2020-2021-ம் ஆண்டிற்கு பாசன விவசாயிகளின் பங்களிப்புடன் நீர் நிலைகளை புனரமைக்கும் விதமாக 34 மாவட்டங்களில் 1387 பணிகள் ரூ.499.79 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள அரசாணை வழங்கப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. மதுரை மாவட்டத்திற்குட்பட்ட பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான நீர் நிலைகளை புனரமைக்க 56 பணிகளுக்கு ரூ.31.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெரியாறு வைகை வடிநிலக் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 36 பணிகள் ரூ.22.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரியாறு வைகை வடிநிலக் கோட்டம் மதுரையின் கட்டுப்பாட்டிலுள்ள கால்வாய்களில் குடிமராமத்துத் திட்டம் 2020-2021-ம் ஆண்டில் தற்பொழுது ஒரு பணி எடுத்துக் கொள்ளப்பட்டு ரூ.90.00 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மதுரை வடக்கு வட்டத்தில் 148.17 ஹெக்டேர் நிலங்கள் பாசன பயன்பெறும். இப்பணிகள் அனைத்தும் பாசன விவசாயிகளின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகிறது. மேற்படி பணிகள் அனைத்தும் 31.08.2020க்குள் முடிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
2016-2017-ம் ஆண்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் பெரியாறு வைகை வடிநிலக் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 11 பணிகள் ரூ.86.00 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டன. 2017-2018-ம் ஆண்டு குடிமராத்துத் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் 65 பணிகள் ரூ.1713.20 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டன. மேலும் 2019-2020-ம் ஆண்டு குடிமராத்துத் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் 53 பணிகள் ரூ.1920.00 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டன.
மாண்புமிகு அம்மாவின் அரசு 2016-17 முதல் இந்த ஆண்டு வரை ரூ.1428.95 கோடி மதிப்பீட்டில் 6246 பணிகள் மேற்கொள்ளப்பட்டு நீர்நிலைகள் அனைத்து நிரம்பி கொண்டிருக்கிறது. மதுரை, திண்டுக்கல் மக்களுக்கு நல்ல செய்தி என்னவென்றால் பெரியார் அனையில் நீர்மட்டம் 136 அடியை தாண்டியுள்ளது. அதனால் உபரியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதேபோல் வைகையில் 39 அடி நீர்மட்டம் உள்ளதால் விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கு நல்ல வாய்ப்பை உருவாக்கி இருக்கிறது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அரசு. கண்மாய்கள் தூர்வார் படுவதால் உபரியாக வரும் நீரை சேமித்து வைப்பதால் சுமார் 400 ஏக்கர் விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய பயன்படும். கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தடுப்பு அணைகள் கட்டப்பட்டதால் நீர் அதிக அளவில் சேமிக்கப்பட்டு விவசாயிகள் பயன்பெறுவார்கள் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் .டி.ஜி.வினய்,இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் பி.செல்வராஜ், செயற்பொறியாளர்(பெரியார்-வைகை) சுகுமாரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.