தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் செப்டிக் டேக் கட்டுவதற்கு குழிதோண்டும் போது மண் சரிந்தது இதில் தொழிலாளிகள் இருவர் சிக்கினார்கள் அவர்களை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ராமுத்தேவர் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் மணி (வயது 37). இவர்தனது வீட்டின் அருகே கழிப்பறை கட்டுவதற்காக செப்டிக் டேங் அமைக்க குழி தோண்டுவதற்கு அதே ஊர் கிணற்றடி தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கணேசன் (23), இசக்கி மகன் மணிகண்டன் (19) ஆகிய இருவரையும் நியமித்துள்ளார். இருவரும் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மண் சரிந்து இருவரும் அதில் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடினர்.
இதுகுறித்து உடனடியாக வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த நிலைய அலுவலர் சேக்அப்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று இரண்டு மணி நேரமாக போராடி கணேசன், மணிகண்டன் ஆகிய இருவரையும் மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவ்விருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மண்சரிவில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இருவரையும் உரிய நேரத்தில் விரைந்து வந்து உயிரோடு மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த வாசுதேவநல்லூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
Tags:
மாவட்ட செய்திகள்