கள்ளகுறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் பெற்ற தாயே குழந்தையை ஆற்றில் வீசிசென்ற சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உளுந்தூர்பேட்டை அடுத்த மங்களம் கிராமத்தை சார்ந்த முத்து என்பவரின் மனைவி தீபா(33). இருவருக்கும் ஏற்கனவே 8 வயதில் ஓர் ஆண்குழந்தை இருக்கும் நிலையில்,
சில மாதங்களைக்கு முன்னால் சித்தூருக்கு பணிக்கு சென்ற தீபாவிற்கு கடந்த 15ம் தேதி சித்தூர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
அங்கிருந்து தனது தாய் வீட்டிற்கு திருக்கோவிலூர் அடுத்துள்ள மிலாரிபட்டு கிராமத்துக்கு வந்துள்ளார். தீபா திருக்கோவிலூர் வந்ததும் யாருக்கும் தெரியாமல் குழந்தையை ஆற்றில் வீசி சென்றுள்ளார்.
ஆற்றில் குழந்தையின் அழுகுரல் கேட்ட அப்பகுதி மக்கள் உடனே சென்று பார்த்துள்ளனர். பின்னர் குழுந்தையை உடனடியாக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். மருத்துவ மனையின் மூலமாக திருக்கோவிலூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனை அடுத்து உடனே விரைந்து வந்த திருக்கோவிலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவசந்திரன் தலைமையிலான போலிசார், ஆற்றில் வீசி சென்ற குழுந்தையின் தாயான தீபாவை ஒரு மணி நேரத்தில் பிடித்து விசாரித்தனர். அதில் தீபா தாம் ஏற்கனவே வறுமையில் தவித்து வருவதாகவும், பிறந்தது பெண் குழந்தை என்பதால் தன்னால் வளர்க்க முடியாது என்ற காரணத்தால் ஆற்றில் வீசி சென்றதாக கூறியுள்ளார்.
பின்னர் உதவி ஆய்வாளர் சிவசந்திரன் தீபாவிற்க்கு அறிவுரை வழங்கினார். மேலும் குழந்தைக்கு சற்று உடல் நலம் பாதிக்கப்பட்ட காரணத்தால் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.