தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்திருந்த நிலையில், சென்னையில் தாறுமாறாக வைரஸ் பரவியது. கிட்டத்தட்ட தினமும் 2 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர்.
சென்னையில் டாக்டர்கள், நர்சுகளுக்கு நோய்த்தொற்று வேகமாக பரவியது அச்சமூட்டி வந்தது.
இதனால் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் மக்கள் சென்னையை விட்டு அதிகளவில் வெளியேறினர்.
இந்நிலையில், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. வரும் 19-ஆம் தேதி முதல் 12 நாட்களுக்கு அமலில் இருக்கும் இந்த ஊரடங்கில் அத்தியாவசிய கடைகள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது.
மற்றபடி அனைத்துக்கடைகளும் அடைக்கப்படும். தொழில்நிறுவனங்களும் இயங்காது.
பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.
மேலும், பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கினால் பாதிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரத்துக்காக ரேசன்கார்டுகளுக்கு ரூ.1000 வழங்கப்படும்.
சென்னையில் மதியம் 2 மணிக்கு பிறகு கடைகள் அடைக்கப்படும் என ஏற்கனவே வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.