ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு கடந்த 24.3. 2020- ம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 11.5.2020 -ம் தேதி திங்கட்கிழமை முதல் பல்வேறு பணிகள் மற்றும் கடைகள் திறப்பதற்கு சில வரைமுறைகளுடன் மாநில அரசால் அனுமதியளிக்கப்பட்டது.
இன்று 14.5.2020-ம் தேதி கருங்கல்பாளையம் காவல் நிலைய சரகம் காவிரி ரோட்டில் உள்ள டாடா தனிஷ்க் நகைக்கடையில் அரசு வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளை மீறி குளிர்சாதன வசதியுடன் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வந்தனர்.
அதேபோல் பெருந்துறை சாலையில் உள்ள ஆலன் சோலி, லூயிஸ் பிலிப் ஆகிய துணிக் கடைகளும் குளிர்சாதன வசதியுடன் விற்பனை செய்து வந்தனர்.
மேலும் கருங்கல்பாளையம் சரக எல்லை மாரியம்மன் கோயில் அருகில் செயல்பட்டு வரும் கீர்த்தி பேக்கிரியிலும், ஈரோடு நகர காவல் நிலைய சரகத்தில் பார்க் ரோட்டில் உள்ள ரவி டீ கடைகளில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் என்ற நிபந்தனைகளை மீறி வாடிக்கையாளர்களை கடையில் உள்ளே அமர வைத்து டம்ளர்களில் டீ வழங்கியுள்ளனர்.
மேற்கொண்ட கடைகளை ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் கதிரவன், மாவட்ட கண்காணிப்பாளர் சக்தி கணேசன், ஈரோடு மாநகராட்சி ஆணையர் ஆகியோர் ஆய்வு செய்து அரசு விதித்த நிபந்தனைகளை மீறி விற்பனை செய்ததற்காக கடைகள் சீல் வைக்கப்பட்டும், அதன் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
எனவே ஈரோடு மாவட்டத்தில் அரசு வரை முறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்ட பணிகள் மற்றும் கடைகள் நிபந்தனைகளை கடைபிடித்து குளிர் சாதன வசதி இருந்தால் அதை இயக்காமல் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தனி நபர் இடைவெளியினை பின்பற்ற அறிவுறுத்தியும், கிருமி நாசினிகள் பயன்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும்.
மீறி செயல்படும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் தெரிவித்துள்ளார்.