நாசரேத் அருகே வீடு புகுந்து இருவர் வெட்டிக் கொலை - மூவர் கைது, மூவருக்கு வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள உடையார்குளம், காந்திபுரத்தைச் சேர்ந்தவர் அருணாசலம் மகன் பலவேசம் (64).விவசாயி.இவர் வைத்தியலிங்கபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த தங்கபாண்டி மகன் முத்துராஜ் (40) என்பவரிடம் நிலப்பத்திரத்தை கொடுத்து 40 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினாராம். பணத்தை வட்டியுடன் திருப்பி செலுத்திய பின்னரும் அவர் பத்திரத்தை திருப்பிக் கொடுக்கவில்லையாம். இதுகுறித்து முத்துராஜின் அண்ணன் சண்முகசுந்தரம் என்பவரிடம் பலவேசம் புகார் கூறினாராம். 

 


 

ஆனால் அவர் தம்பிக்கு சாதகமாகப் பேசியதோடு, பலவேசத்தை ஜாதி பெயரை சொல்லி திட்டி மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து பலவேசம் நாசரேத் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சண்முகசுந்தரத்தை கடந்த 7ம் தேதி போலீசார் கைது செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜ் தனது, சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் 6பேருடன் பலவேசத்தின் வீட்டிற்குச் சென்று அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனை தடுக்க முயன்ற அவரது மருமகன் தங்கராஜ் (27) என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்ததில் இருவரும்  சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். 

 

இதுகுறித்து தகவல் அறிந்து நாசரேத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட இருவரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இரட்டைக் கொலை தொடர்பாக நாசரேத் இன்ஸ்பெக்டர் சகாயசாந்தி வழக்குப் பதிவு செய்துள்ளார். சாத்தான்குளம் டிஎஸ்பி பிரதாபன் விசாரணை நடத்தி வருகிறார். கொலை தொடர்பாக முத்துராஜ், அவரது சகோதரர்கள் பாரதி (45), செல்லதுரை (47) ஆகிய 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மற்றொரு சகோதரர் முத்துகுமார் (38), மற்றும் ஞானசுந்தர் (35), செந்தில் (37) ஆகிய 3பேரை தேடி வருகின்றனர். 

 

கொலை செய்யப்பட்ட பலவேசத்திற்கு 3 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர். இதில் 2வது மகள் முத்துலெட்சுமியின் கணவர் தங்கராஜ். இந்த தம்பதியருக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகியுள்ள நிலையில் மாமனார் வீட்டில் வசித்து வந்துள்ளார். மாமனாரை காப்பாற்ற முயன்றதால் அவரும் கொலை செய்யப்பட்டுள்ளார். 

 

இந்த இரட்டைக் கொலை சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.இரு சமூகத்தினரிடையே நடந்த மோதல் காரணமாக சாதி மோதல் உருவாகும் பதற்றம் ஏற்பட்டள்ளதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அருண் பாலகோபாலன் பார்வையிட்டார்.

Previous Post Next Post