திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் பொதுமக்களுக்கு கொடுத்த பணத்திற்கு வட்டிக்கு மேல் வட்டி கேட்டு சிரமப் படுத்துவதால் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மே 31-ஆம் தேதி வரை நான்காம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது தொழில் நகரமான திருப்பூரில் ஊரடங்கு காரணமாக தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இதனால் தொழிலாளர்கள் பலர் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் வங்கிகளில் இஎம்ஐ கட்டுவதற்கு ரிசர்வ் வங்கி காலக்கெடு வழங்கியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மூன்று மாதம் வரை இஎம்ஐ கேட்டு வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என அறிவித்து இருந்தது. இந்நிலையில் திருப்பூர் அவினாசி சாலையில் செயல்பட்டு வரும் பஜாஜ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இஎம்ஐ தொகையை கட்டுமாறு குறுந்தகவல் அனுப்பி வந்துள்ளது.
மேலும் வங்கிகளில் போதுமான இருப்பு இல்லாத வாடிக்கையாளர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு இஎம்ஐ கட்டணத்தைச் செலுத்துமாறு வற்புறுத்தி வந்துள்ளது. ஊரடங்கு காரணமாக வேலை இழந்து தவித்து வரும் தொழிலாளர்கள் இதுபோன்று வங்கியிலிருந்து இஎம்ஐ கட்டுவதற்கு குறுந்தகவல் மற்றும் தொலை பேசியில் அழைப்பு விடுத்ததால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள பஜாஜ் நிறுவனத்தை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பஜாஜ் இ.எம்.ஐ., கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் கந்துவட்டிக்காரர்கள் போல நடந்து கொள்வதாகவும், வெப்சைட்டில் சென்று கோரிக்கை விடுத்தால் தான் கொரோனா வைரஸ் கால இ.எம்.ஐ., கட்டுவதில் விலக்கு பெற முடியும் என்று கூறுகின்றனர்.
ஆனால் அவர்களது வெப்சைட்டில் இந்த கால கட்டத்துக்கான விலக்கு கோரிக்கை ஏற்கப்படாமல் இருக்குமாறு வெப் சைட்டை கட்டமைத்து நூதனமாக பொதுமக்களை இ.எம்.ஐ., கட்டும்படி வற்புறுத்த செய்வதாக போராட வந்தவர்களில் சிலர் கூறினர்.
மேலும் பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் கூறுகையில்,’ பஜாஜ் தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கு கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் இ.எம்.ஐ., கட்ட வற்புறுத்துவது அநியாயம். பொதுமக்கள் வேலையில்லாமல் தவித்து வரும் இந்த காலகட்டத்தில், லோன்களுக்கு இ.எம்.ஐ., கட்ட வற்புறுத்தி டார்ச்சர் செய்கிறார்கள்.
தானி போன்ற நிறுவனங்கள் அரசு விலக்கு அறிவித்த காலக்கெடுவுக்கு லோன் கட்ட சொல்லவில்லை. ஆனால் பஜாஜின் இந்த கொடூர செயல் பொதுமக்களை சிரமப்படுத்துவதாக உள்ளது.
கூடுதல் வட்டி கட்ட தயார் நிலையில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, உண்மையாக லோன் இ.எம்.ஐ., கட்ட கால அவகாசம் வழங்க வேண்டும்.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அமைப்புகள் தனி கவனம் செலுத்தி, இன்று அறிவித்துள்ள அடுத்த மூன்று மாத தவணை கட்டுவதற்கான அவகாசத்தையாவது பெற்றுத்தர வேண்டும். என்றனர்.
உரிய வட்டியை பெற்றுக் கொண்டு, இ.எம்.ஐ., செலுத்த 3 மாத கால அவகாசம் வழங்கலாமே... செய்வீர்களா... பஜாஜ்!