திருப்பூர் மக்களுக்கு வேலை வந்திருச்சு... மாஸ்க் ஏற்றுமதிக்கு தடை நீக்கம்... வெளிநாட்டு ஆர்டர்கள் குவிய வாய்ப்பு

கொரோனா நோய்ப்பரவலை தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, நாட்டையே புரட்டிப் போட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 89 ஆயிரமாக உள்ளது. தமிழகத்தில் பாதிப்பு 10,585 ஆக உள்ளது.


இந்த நிலையில் மற்ற நாடுகளை காட்டிலும் நோய்பரவல், பாதிப்பு வீதம் குறைவு என கூறப்பட்ட நிலையிலும், ஊரடங்கு காரணமாக தொழில் இல்லாமல் பெரிய அளவிலான பொருளாதார பாதிப்பு ஏற்ப்பட்டு உள்ளது.


பெரும்பாலான தொழில்களுக்கு தடை நீக்கி, பணிகளை செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ள போதும், திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் இயல்பு நிலை திரும்பவில்லை.


ஆண்டுக்கு 26 ஆயிரம் கோடியை பின்னலாடை தொழில் ஏற்றுமதி மூலம் வருமானம் ஈட்டித்தந்த திருப்பூர் மாநகரம் இன்று முழுமையாக முடங்கி போய் இருக்கிறது. இங்குள்ள சுமார் 2 லட்சம் வடமாநில தொழிலாளர் உள்பட 10 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இன்றி அலைமோதுவதை கண்கூடாக காணமுடிகிறது.


இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள், சேம்பிள் தயாரிப்பு பணிகளை செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளன. மேலும், மாஸ்க், பி.பி.இ., கிட் உள்ளிட்ட கொரோனா தடுப்பு மருத்துவ ஆடைகள் தயாரிப்பு பணிகளும் நடைபெற்று வந்தன.


இருந்த போதிலும், மாஸ்க், பி.பி.இ., கிட் போன்றவற்றை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்ததால், உள்நாட்டு பயன்பாட்டுக்கு மட்டும் உற்பத்திப் பணிகள் நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில், நாட்டின் சுயதேவை போக மீதமுள்ள மாஸ்க், பி.பி.இ., கிட் போன்றவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.


சனிக்கிழமை மாலை வர்த்தக தொழில் துறை அமைச்சர்க டைரக்டர் ஜெனரல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சர்ஜிக்கல் மற்றும் மெடிக்கல் மாஸ்க் தவிர மற்ற மாஸ்க்குகள் ஏற்றுமதி செய்யலாம்” என அறிவித்துள்ளது. 


அந்த அறிவிப்பாணையில், ஏற்கனவே ஜனவரி 31 ஆம் தேதி, மற்றும் மார்ச்.19 ஆம் தேதிகளில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து வகை மாஸ்க் ஏற்றுமதிக்கான தடையில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.


‘சர்ஜிக்கல் மற்றும் மெடிக்கல் மாஸ்க் தவிர காட்டன், சில்க், வூல், மற்றும் பின்னல் துணிகளால் செய்யப்படும் அனைத்து வகை மாஸ்க்குகள் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ள குறியீட்டு எண் கொண்ட குறிப்பிட்ட மாஸ்க் வகைகளுக்கான ஏற்றுமதி தடை தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.


இதன் மூலம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கேட்டு வந்த காட்டன், பின்னல் துணிகளிலான மாஸ்க் ஏற்றுமதி விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஏற்கனவே, பனியன் கம்பெனிகள் திறந்த நிலையிலும், போதிய ஆர்டர்கள் இல்லாமல் வேலையில்லாமல் இருந்த பனியன் கம்பெனிகளுக்கு, மாஸ்க் ஏற்றுமதி தடை நீக்கம் மூலம் ஆர்டர்கள் அதிகரிக்கும் என்றும் இதன்மூலம் பெரும்பாலான பனியன் கம்பெனிகள் விரைவில் இயங்க ஆரம்பித்து, திருப்பூரின் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் திருப்பூர் தொழில் துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 


Previous Post Next Post