களத்தில் இறங்கி கொரோனாவை வீழ்த்தினார்கள்...ஈரோடு மாவட்ட நிர்வாகத்துக்கு மத்திய அமைச்சகம் ஸ்லைட் வெளியிட்டு பாராட்டு

ஈரோடு மாவட்டம் தான் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் முதன்முதலில் பதற வைத்த மாவட்டமாக இருந்தது. மார்ச் மாத துவக்கத்தில் இங்கு 70 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.



இதனால், இந்த மாவட்ட நிர்வாகம் நோய்த்தொற்று ஆரம்பிக்கும் காலத்திலேயே பெருமளவு அழுத்தத்துக்கு உள்ளானது. 


வெளிநாட்டில் இருந்து ஈரோடு மாவட்டம் வந்தவர்களுக்கு ஏற்ப்பட்ட நோய்த்தொற்றானது யாருக்கெல்லாம் பரவக்கூடும் என கணக்கெடுத்து தலை சுற்றித்தான் போனார்கள்.


ஆனாலும், தங்களது அயராத பணிகளால் கொரோனாவை வென்றெடுத்தது ஈரோடு மாவட்ட நிர்வாகம். 1 லட்சத்து 66 ஆயிரம் பேரை தனிமைப்படுத்தி கண்காணித்தது. 


கலெக்டர் கதிரவன், போலீஸ் எஸ்.பி., சக்தி கணேசன் ஆகியோர் முழுமையான கள செயல்பாட்டிலேயே இருந்தார்கள். 


கிருமிநீக்கம், தனிமைப்படுத்துதல், ஹோம் குவாரண்டைன், போக்குவரத்து கட்டுப்பாடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை என அத்தணையிலும் முழு ஈடுபாட்டுடனும், அர்ப்பனிப்புடனும் செயல்பட்டனர் இந்த மாவட்ட நிர்வாகத்தினர். 


18 கட்டுப்பாட்டு பகுதிகளை கண்காணிப்பதில் 15 ஆயிரம் அரசு ஊழியர்களும், இரண்டாயிரம் போலீசாரும் அயராமல் பணியாற்றினார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.


இந்த மாவட்டத்தில் கட்டுப்பாட்டு மண்டலங்கள் அக்கு அக்காக பிரித்து அடைக்கப்பட்டதைப்பார்த்து மாவட்ட மக்களே மிரண்டு தான் போனார்கள்.


ஆனால் அதற்கெல்லாம் பலனாக 70 பேரில் 69 பேரை கொரோனாவில் இருந்து மீட்டு வீட்டுக்கு அனுப்பினார்கள். 


இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், மாவட்ட கலெக்டர் கதிரவனும், போலீஸ் எஸ்.பி., சக்திகணேசனும், நோய் மீண்டவர்களை நேரில் சென்று பூக்கொத்து கொடுத்து வழியனுப்பினார்கள்.


கொரோனா பாதிப்பு பக்கமே தலைகாட்டாமல் இருக்கும் அதிகாரிகள் மத்தியில், எல்லாவற்றுக்கும் களத்தில் இறங்கி செயல்பட்ட இவர்களது செயல் நாடு முழுவதும் பெரும் பாராட்டை பெற்றது. 


இவர்களின் இந்த நடவடிக்கைகளுக்கு எல்லாம் கிடைத்த பரிசு தான், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நோய்த்தொற்று இல்லாமல் பச்சை மண்டலமாக இருக்கிறது ஈரோடு மாவட்டம். 


இப்படி, களத்தில் இறங்கி செயலாற்றிய ஈரோடு மாவட்ட நிர்வாகத்துக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் ஸ்லைட் வெளியிட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.


’கோவிட்-19 போரில் ஈரோடு வழிகாட்டுகிறது” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டு உள்ள அந்த ஸ்லைடில் மாவட்ட கலெக்டர் கதிரவன், போலீஸ் எஸ்.பி., சக்தி கணேசன் ஆகியோரின் நோய்த்தடுப்பு பணிகளில் ஈடுபட்ட படங்களை வெளியிட்டு உள்ளது.


மேலும், அந்த ஸ்லைடில் ‘’ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், முன்னதாகவே செயலாற்றி நோய்த்தடுப்பு நடவடீக்கைகள் மூலம் வைரசின் தொடர்பு சங்கிலியை உடைத்துள்ளார். ஈரோடு மாவட்ட மக்களும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி உள்ளனர். முன்னதாகவே தொடர்புச்சங்கிலையை கண்டறிந்து, நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிக்கு நன்றி’’ என குறிப்பிடப்பட்டு உள்ளது.


 களத்தில் இறங்கி வெற்றி கண்ட ஈரோடு மாவட்ட நிர்வாகத்தினை பாராட்டுவோம்!


Previous Post Next Post